ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து ஆய்வு செய்ய குழு அமைத்திருப்பது பிரதமர் நரேந்திர மோடியின் மிக முக்கிய முடிவு என்று அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வாஸ் சர்மா பாராட்டு தெரிவித்துள்ளார். இதேபோல், உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தும் வரவேற்றுள்ளார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து ஆய்வு செய்ய குழு அமைத்திருப்பது பிரதமர் மோடியின் மிக முக்கிய முடிவு. பிரதமர் கேட்டுக்கொண்டதற்கு இணங்க, இந்தக் குழுவின் தலைவர் பொறுப்பை முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஏற்றுக்கொண்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இனி இந்த குழு ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது குறித்து ஆராயும். பல்வேறு தேர்தல்களை நடத்துவதால் ஏராளமான பணம் வீணாகிறது. அதோடு, ஒவ்வொரு ஆண்டும் தேர்தல் காலமாகவே இருக்கிறது. இதன் காரணமாக வளர்ச்சி பெருமளவில் பாதிக்கப்படுகிறது.
பிரதமர் மோடி இதை சரியாக உணர்ந்து சரியான முடிவை எடுத்துள்ளார். ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற நிலை வரும்போது இந்தியாவின் வளர்ச்சி வேறு வடிவத்தில் இருக்கும். செலவு குறையும். 5 ஆண்டுகள் முழுவதும் வளர்ச்சிப் பணிகள் நடைபெறும். இது நடந்தால் நமது நாடு உலகுக்கே குருவாக ஆகும். அமிர்த காலத்தில் நாட்டுக்கு பிரதமர் மோடியால் கொடுக்கப்பட்ட ஒரு சிறந்த பரிசு இந்த குழு. இந்தக் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் நாடாளுமன்றமும், பிரதமரும் பொருத்தமான முடிவுகளை எடுப்பார்கள். துணிச்சலான இந்த முடிவை எடுத்ததற்காக அசாம் மக்கள் சார்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.
யோகி வரவேற்பு: ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து ஆராய குழு அமைக்கப்பட்டிருப்பதற்கு வரவேற்பு தெரிவித்துள்ள உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யாநாத், “இது பாராட்டத்தக்க ஒரு நடவடிக்கை. இதற்காக பிரதமர் நரேந்திர மோடிக்கு உத்தரப் பிரதேச மக்கள் சார்பாக நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். ஒரே நாடு ஒரே தேர்தல் காலத்தின் தேவை.
தேர்தல் காலங்களில் வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்வதிலும், புதிய கொள்கைகளை முன்னெடுப்பதிலும் பாதிப்பு ஏற்படுகிறது. நாடாளுமன்றத் தேர்தலையும் சட்டமன்றங்களின் தேர்தலையும் இணைத்து நடத்த வேண்டியது மிகவும் அவசியம். இந்த நடவடிக்கையை நான் வரவேற்கிறேன்” என தெரிவித்துள்ளார்.
-th