நாடாளுமன்ற தேர்தலை ஒன்றாக எதிர்கொள்ள இந்தியா கூட்டணி கட்சிகள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
பா.ஜனதா அரசை வீழ்த்த எதிர்க்கட்சிகள் காய் நகர்த்தி வருகின்றன. இதற்காக எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, அதன் முதல் கூட்டம் பீகார் மாநிலம் பாட்னாவில் கடந்த ஜூன் மாதம் நடைபெற்றது. கர்நாடக மாநிலம் பெங்களூருவில் கடந்த மாதம் நடந்த 2-வது கூட்டத்தில் எதிர்க்கட்சிகள் கூட்டணிக்கு ‘இந்தியா’ என பெயரிடப்பட்டது.
இந்த நிலையில் இந்தியா கூட்டணியின் 3-வது கூட்டம் இரண்டாவது நாளாக இன்று நடைபெற்று வருகிறது. 28 கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர். நாடாளுமன்ற தேர்தலை சந்திக்க எதிர்க்கட்சிகள் முக்கிய வியூகம் வகுக்க முடிவு செய்யப்பட்டு இருப்பதால், இந்த கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
இந்த நிலையில், வரும் நாடாளுமன்றத் தேர்தலை ஒன்றாக எதிர்கொள்ள இந்தியா கூட்டணி கட்சிகள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மக்களைவை தேர்தலில் இயன்றவரை ஒன்றாக இணைந்து போட்டியிடுவது என கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை உடனே தொடங்கி விரைவில் முடிக்கவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
பொதுமக்கள் மீதான அக்கறை மற்றும் முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினைகளை பல்வேறு பகுதிகளில் பொதுக்கூட்டம் நடத்தி எடுத்துரைக்கவும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் தகவல் தொடர்பு, ஊடக உத்திகள் மூலம் பரப்புரைகளை ஒருங்கிணைக்கவும் இந்தியா கூட்டணி கட்சிகள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
-dt