பருவ காலத்தில் காய்ச்சல் உச்சம் தொடுவதற்கு முன்பே தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும். காய்ச்சல் பாதிப்பு ஏற்படும் அனைவருக்கும் இந்த அறிகுறிகள் அனைத்தும் இருக்காது.
பருவகால மாற்றம் தொற்று நோய்கள் பரவுவதற்கு ஏற்றகாலம். சென்னையில் கடந்த சில நாட்களாக விட்டு விட்டு மழை பெய்வதால் மழைக் காலத்தில் பரவும் காய்ச்சல், வயிற்றுபோக்கு போன்ற பாதிப்பு அதிகரித்து வருகிறது. அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் காய்ச்சல் வயிற்றுப்போக்கால் பாதிக்கப்பட்டு பலர் சிகிச்சைக்கு வந்து கொண்டிருக்கிறார்கள்.
வைரஸ் காய்ச்சல் மட்டு மில்லாமல் விஷக்காய்ச்சலும் பரவுவதால் காய்ச்சல் தானே, வரும் போகும் என்று சாதாரணமாக இருப்பதும் ஆபத்தை ஏற்படுத்தி விடும். விஷகாய்ச்சலாக இருந்தால் கர்ப்பிணிகள், வயதானவர்கள், சர்க்கரை நோயாளிகள், உயர் ரத்த அழுத்தம் உடையவர்கள் ஆகியோரை கடுமையான பாதிப்புக்கு உள்ளாக்கி விடும். ரத்த நாளங்கள் உள்பட உடலில் பல பாகங்களில் வீக்கத்தை உருவாக்கும். இதனால் பக்கவாதம் ஏற்படவும் வாய்ப்பு உண்டு.
எனவே காய்ச்சல் கண்டவர்கள் உடனடியாக மருத்துவர்களை அணுகுவது நல்லது. காய்ச்சல் கண்டவர்கள் இருமல், சளி, உடல் வலி ஆகியவற்றால் ஒருவாரத்துக்கும் மேலாக அவதிப்படுகிறார்கள். இந்த மாதிரி காய்ச்சல் மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டு ஆஸ்பத்திரிகளுக்கு நோயாளிகள் வந்தால் சுகாதாரத் துறை கண்காணிக்க வேண்டும்.
உடனடியாக சம்பந்தப்பட்ட வரை பரிசோதித்து வைரஸ் தாக்குதலா? பாக்டீரியாவா? என்ன வகை காய்ச்சல்? தண்ணீர் மூலம் பரவி உள்ளதா? உணவு மூலம் வந்துள்ளதா? என்பதை கண்டறிந்து உடனடியாக அந்த பகுதியில் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இதன் மூலம் மேலும் பரவாமல் தடுக்க முடியும்.
கொரோனாவுக்கு தடுப்பூசி போட்டுக் கொண்டதை போல் பருவகால காய்ச்சல் மற்றும் நோய் தொற்றுகளில் இருந்து தற்காத்து கொள்ள ஆண்டுதோறும் பருவகாலம் தொடங்குவதற்கு முன்பே நிமோனியா தடுப்பூசி போட்டுக் கொள்வது நல்லது என்கிறார்கள் டாக்டர்கள். இது ரூ.700 முதல் ரூ.1000 வரை விலை உடையது. அதிலும் வயதானவர்கள், உயர் ரத்த அழுத்தம் உடையவர்கள், சர்க்கரை நோயாளிகள் போட்டுக் கொள்வது பாதுகாப்பானது என்கிறார்கள்.
இந்த மாதிரி தடுப்பூசி போட்டுக் கொள்வதால் மாரடைப்பு, பக்கவாதம் போன்ற கடுமையான ஆபத்துக்களை தவிர்க்க முடியும் என்கிறார்கள். இந்த மாதிரி தடுப்பூசி எடுத்துக் கொண்டவர்களில் 70 சதவீதம் பேர் உயிர் ஆபத்துக்களில் இருந்து தப்புகிறார்கள்.
இந்த தடுப்பூசி போடுபவர்கள் கடந்த பருவகாலத்தில்தானே போட்டோம் என்று விட்டு விடுவதால் எந்த பலனும் இல்லை. பருவ காலத்தில் காய்ச்சல் உச்சம் தொடுவதற்கு முன்பே தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும். ஆண்டுதோறும் இந்த மாதிரி விஷ காய்ச்சல் உலகம் முழுவதும் பரவி ஏராளமானவர்களை தாக்குகிறது. இதில் பலர் ஐ.சி.யு.வில் அனுமதிக்கப்படும் அளவுக்கு பாதிக்கப்படுகிறார்கள்.
இதன் அறிகுறி கடுமையான காய்ச்சல், மூக்கு ஒழுகுதல், தலைவலி, இருமல், உடல் மற்றும் மூட்டுவலி, வாசனை இழப்பு போன்றவையாகும். காய்ச்சல் பாதிப்பு ஏற்படும் அனைவருக்கும் இந்த அறிகுறிகள் அனைத்தும் இருக்காது. பொதுவாக வைரஸ் காய்ச்சல் மூச்சு காற்று மூலம் பரவுகிறது.
-mm