டெல்லியில் நடைபெற உள்ள ஜி-20 உச்சி மாநாட்டில் சீன அதிபர் ஜி ஜின்பிங் பங்கேற்கவில்லை.
கடந்த 1999-ம் ஆண்டில் ஜி-20 அமைப்பு தொடங்கப்பட்டது. இதில் அமெரிக்கா, ரஷ்யா, இங்கிலாந்து, ஜெர்மனி, பிரான்ஸ், ஜப்பான், சீனா, இந்தியா, கனடா, துருக்கி, தென் ஆப்பிரிக்கா, சவுதி, தென்கொரியா, மெக்சிகோ, இத்தாலி, இந்தோனேசியா, பிரே
சில், ஆஸ்திரேலியா, அர்ஜென்டினா ஆகிய 19 நாடுகளும், ஐரோப்பிய ஒன்றியமும் உறுப்பினர்களாக உள்ளன.
இந்த ஆண்டுக்கான ஜி20 தலைமை பொறுப்பை இந்தியா ஏற்றிருக்கிறது. இதன்படி கடந்த ஓராண்டாக இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் ஜி-20 தொடர்பான மாநாடுகள் நடைபெற்றன. இறுதியாக ஜி-20 அமைப்பின் உச்சி மாநாடு தலைநகர் டெல்லியில் வரும் 9, 10-ம் தேதிகளில் நடைபெறுகிறது. இதில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உட்பட சுமார் 40 நாடுகளை சேர்ந்த தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். பிரதமர் நரேந்திர மோடியை ரஷ்ய அதிபர் புதின் அண்மையில் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, உக்ரைன் போரில் கவனம் செலுத்தி வருவதால், ஜி-20 உச்சி மாநாட்டில் பங்கேற்க இயலாது என்று விளக்கமளித்தார்.
இந்த சூழலில் சீன வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் மாவோ நிங் நேற்று கூறியதாவது:
டெல்லியில் நடைபெறும் ஜி-20 உச்சி மாநாட்டில் பங்கேற்க இந்தியா அழைப்பு விடுத்தது. அதை ஏற்று சீன பிரதமர் லி கியாங், மாநாட்டில் பங்கேற்பார்.
உலக பொருளாதாரம் பல்வேறு சவால்களை சந்தித்து வருகிறது. இந்த நேரத்தில் உலக பொருளாதாரத்தை மீட்டெடுப்பது, ஒருங்கிணைந்த வளர்ச்சியை உறுதிப்படுத்துவது தொடர்பாக டெல்லி மாநாட்டில் ஒருமித்த கருத்து எட்டப்படும் என்று சீனா நம்புகிறது. இவ்வாறு மாவோ நிங் தெரிவித்தார்.
சீன வெளியுறவுத் துறை அறிவிப்பின் மூலம் சீன அதிபர் ஜி ஜின்பிங், ஜி-20 உச்சி மாநாட்டில் பங்கேற்க மாட்டார் என்பது உறுதியாகி உள்ளது.
இதுகுறித்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறும்போது, “டெல்லி ஜி-20 உச்சி மாநாட்டில் சீன அதிபர் ஜி ஜின்பிங் பங்கேற்காதது மிகுந்த வருத்தம் அளிக்கிறது. எனினும் அவரை விரைவில் சந்தித்துப் பேசுவேன்” என்று தெரிவித்தார்.
ஜி-20 உச்சி மாநாட்டை சீன அதிபர் ஜி ஜின்பிங் புறக்கணித்திருப்பது குறித்து சர்வதேச அரசியல் நோக்கர்கள் கூறியதாவது:
கரோனா பெருந்தொற்று காலம் தொடங்கி சீனாவில் பொருளாதார மந்தநிலை நீடிக்கிறது. இதை சீனா மறைத்து வந்த நிலையில் தற்போது வெட்டவெளிச்சமாகி இருக்கிறது. சீனாவின் ரியல் எஸ்டேட் துறை கடுமையாக வீழ்ச்சி அடைந்திருக்கிறது. ஏராளமான ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் திவாலாகி வருகின்றனன.
மேலும் கனமழையால் வேளாண் பயிர்கள் அழிந்து உணவு தட்டுப்பாடும் ஏற்பட்டு இருக்கிறது. இதுபோன்ற பல காரணங்களால் உள்நாட்டில் ஜி ஜின்பிங்கின் செல்வாக்கு சரிந்திருக்கிறது. இதன் காரணமாகவே உள்நாட்டில் தனது செல்வாக்கை மீண்டும் நிலைநாட்ட இந்தியாவின் அருணாச்சல பிரதேசத்தை சொந்தம் கொண்டா டும் வகையில் புதிய வரைபடத்தை சீன அரசு அண்மையில் வெளியிட்டது. இதற்கு சர்வதேச அளவில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.இதன்காரணமாக டெல்லி ஜி-20 உச்சி மாநாடு மட்டுமல்ல, ஆசியான் மாநாட்டையும் புறக்கணிக்க சீன அதிபர் ஜி ஜின்பிங் முடிவு செய்துள்ளார்.
இவ்வாறு சர்வதேச அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.
-th