அமைச்சராக செந்தில் பாலாஜி நீடிப்பது தார்மிக ரீதியாக சரியானது அல்ல: உயர் நீதிமன்றம்

செந்தில் பாலாஜி அமைச்சராக தொடர்வது குறித்து தமிழக முதல்வர்தான் முடிவெடுக்க வேண்டும்’ என்று தீர்ப்பளித்துள்ள சென்னை உயர் நீதிமன்றம், ‘அமைச்சராக செந்தில் பாலாஜி நீடிப்பது தார்மிக ரீதியாக சரியானது அல்ல’ என்று குறிப்பிட்டுள்ளது.

சட்ட விரோத பணப்பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் உள்ள செந்தில் பாலாஜி வசம் இருந்த துறைகள் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, முத்துசாமி ஆகியோருக்கு ஒதுக்கப்பட்டன. செந்தில் பாலாஜியை இலாகா இல்லாத அமைச்சராக தொடர ஆளுநர் அனுமதி மறுத்த நிலையில், இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி நீடிப்பார் என கடந்த ஜூன் 16-ம் தேதி தமிழக அரசு அரசாணை வெளியிட்டது.

இந்த அரசாணையை ரத்து செய்யக் கோரி வழக்கறிஞரும், தேசிய மக்கள் கட்சியின் தலைவருமான எம்.எல்.ரவி மனு தாக்கல் செய்திருந்தார். அதேபோல, செந்தில் பாலாஜி எந்த தகுதியின் அடிப்படையில் அமைச்சராக நீடிக்கிறார் என விளக்கம் கேட்க உத்தரவிடக் கோரி கொளத்தூரை சேர்ந்த எஸ்.ராமகிருஷ்ணன், அதிமுக முன்னாள் எம்.பி. ஜெ.ஜெயவர்த்தன் ஆகியோர் ரிட் மனுக்களை தாக்கல் செய்திருந்தனர்.

மேலும், அமைச்சர் செந்தில் பாலாஜியை நீக்கம் செய்வதாக ஜூன் 29-ம் தேதி மாலையில் உத்தரவு பிறப்பித்த ஆளுநர், அடுத்த சில மணி நேரங்களில் அந்த உத்தரவை நிறுத்தி வைப்பதாக எடுத்த முடிவை ரத்து செய்யக் கோரி எம்.எல்.ரவி மற்றொரு வழக்கையும் தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்குகளை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு தீர்ப்புக்காக ஒத்திவைத்திருந்தது.

இந்த வழக்கில் தலைமை நீதிபதி எஸ்.வி.கங்கபுர்வாலா மற்றும் நீதிபதி ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வு பிறப்பித்த தீர்ப்பில், “இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி தொடர்வது குறித்து தமிழக முதல்வர்தான் முடிவெடுக்க வேண்டும். அமைச்சராக செந்தில் பாலாஜி நீடிப்பது தார்மிக ரீதியாக சரியனது அல்ல” எனக் கூறி அனைத்து வழக்குகளையும் முடித்துவைத்து உத்தரவிட்டனர்.

 

 

-th