அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீது வழக்குப் பதிவு செய்ய அனுமதி கோரி தமிழக ஆளுநருக்கு சுப்பிரமணியன் சுவாமி கடிதம் எழுதியுள்ளார்.
அவர் தனது கடிதத்தில், “சனாதன தர்மத்தை பின்பற்றுவர்களுக்கு எதிராக உதயநிதி ஸ்டாலின் வெறுப்பு பிரச்சாரம் செய்துள்ளார். ‘டெங்கு, மலேரியா, கரோனா வைரஸ் ஆகியவற்றை ஒழிப்பதுபோல் சனாதனத்தை ஒழிக்க வேண்டும், வெறுமனே எதிர்க்கக் கூடாது. சனாதனத்தை ஒழிக்க வேண்டும்’ என தெரிவித்துள்ளார். அவரது இந்தப் பேச்சு இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 153ஏ, 153பி, 295ஏ, 298, 505 ஆகியவற்றின் கீழ் தண்டனைக்குரியது.
எனவே, உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக கிரிமினல் வழக்கு தொடர திட்டமிட்டுள்ளேன். குற்றம்சாட்டப்பட்டுள்ள நபர் பொதுமக்களுக்கு நன்கு அறிமுகமானவர், அதிக ஆதரவாளர்களைக் கொண்டிருப்பவர். தண்டனைக்குரிய அவரது பேச்சு லட்சக்கணக்கான மக்களைச் சென்றடைந்துள்ளது. அதிக தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. இது சனாதன தர்மத்தைப் பின்பற்றுபவர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. குற்றம்சாட்டப்பட்டுள்ள நபர் தமிழ்நாட்டின் ஆளும் கட்சியைச் சேர்ந்தவர். அவரது இந்தப் பேச்சு தமிழ்நாட்டில் உள்ள சனாதன தர்மத்தைப் பின்பற்றும் மக்களிடையே அச்சத்தையும், பாதுகாப்பின்மையையும், கைவிடப்பட்ட நிலையையும் ஏற்படுத்தி இருக்கிறது.
சமுதாயத்தின் ஒரு குறிப்பிட்ட பிரிவினரை தொடர்ந்து களங்கப்படுத்துவது, அவர்களுக்கு எதிராக வெறுப்பை விதைப்பது எனும் செயல், அவர்களுக்கு எதிராக வன்முறை மற்றும் கலவரங்களைத் தூண்டும் நோக்கம் கொண்டது. எனவே, அவர் (உதயநிதி) மீது நடவடிக்கை எடுக்க பிரிவு 196-ன்படி உங்களின் அனுமதி தேவை. அனுமதி அளிக்குமாறு உங்களைக் கேட்டுக்கொள்கிறேன்” என்று அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், சுப்பிரமணியன் சுவாமி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “அமைச்சராக உள்ள ஸ்டாலின் மகன் மீது வழக்குப் பதிவு செய்ய அனுமதி கோரி தமிழக ஆளுநருக்கு கடிதம் அனுப்பியுள்ளேன். மீண்டும் ஒருமுறை அவர் சனாதன தர்மத்தை இழிவுபடுத்தினால், தமிழக அரசை டிஸ்மிஸ் செய்ய பாடுபடுவேன். இந்தியா ஒரு கூட்டமைப்பு அல்ல; மாநிலங்களின் ஒன்றியம் என்பதை 1991-ல் நிரூபித்தேன்” என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீது குற்றவியல் வழக்குத் தொடர அனுமதி வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி, தமிழக பாஜக சார்பிலும் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
-th