சனாதனம் ஒழியும் வரை எனது குரல் தொடர்ந்து ஒலிக்கும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
தென்காசியில் திமுக மூத்தமுன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கும் விழா மற்றும் தென்காசிமாவட்ட திமுக இளைஞரணி செயல்வீரர்கள் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் அமைச்சர் உதயநிதி பேசியதாவது:
கருணாநிதி தலையைச் சீவஒரு கோடி ரூபாயை ஒரு சாமியார்அறிவித்தார். அதற்கு கருணாநிதி, ‘எனது தலையை நானே சீவி பலஆண்டுகள் ஆகிறது’ என்று சொன்னார். என் தலையை சீவச் சொன்ன உ.பி. சாமியாரின் சொத்து மதிப்பு 500 கோடியாம். இவர் சாமியாரா?. எனது தலையை சீவ எதற்கு 10 கோடி ரூபாய்?. 10 ரூபாய்க்கு சீப்புவாங்கினால் போதும். சனாதனம் ஒழியும் வரை எனது குரல் தொடர்ந்து கொண்டேதான் இருக்கும்.
மணிப்பூர் மாநிலம் 5 மாதமாக பற்றி எரிகிறது. அங்கு ஆட்சி செய்வது பாஜக. இதுவரை 250-க்கும்மேற்பட்டோர் கொலை செய்யப்பட்டுள்ளனர். பிரதமர் இதுவரை அங்கு சென்று பார்க்கவில்லை. மணிப்பூரில் விளையாட்டு வீரர்கள்அதிகம். அவர்கள் பயிற்சி பெற தமிழக முதல்வர் அழைப்பு விடுத்ததன் பேரில், பலர் தமிழகத்தில் தங்கி பயிற்சி எடுத்து வருகின்றனர். இதுதான் சனாதன மாடலுக்கும், திராவிட மாடலுக்கும் உள்ள வித்தியா சம். இவ்வாறு அவர் பேசினார்.
உதயநிதி வீடு, அலுவலகத்துக்கு கூடுதல் பாதுகாப்பு: சனாதனத்தை ஒழிக்க வேண்டும் எனக் கூறிய உதயநிதி ஸ்டாலினின் தலைக்கு ரூ.10 கோடி சன்மானம் அளிக்கப்படும் என உத்தரப்பிரதேச மாநிலம், அயோத்தியைச் சேர்ந்த சாமியார் பிரம்ஹன்ஸ் ஆச்சாரியா அறிவித்தார். இது அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அவர் மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நேற்று பலர் புகார் அளித்தனர்.
இந்த பரபரப்பான சூழலில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை கிழக்கு கடற்கரைச் சாலை, நீலாங்கரை சன் ரைஸ் அவென்யூவில் உள்ள உதயநிதி ஸ்டாலினுக்கு சொந்தமான இல்லம் மற்றும் அடையாறு கிரீன்வேஸ் சாலையில் அமைச்சர்களுக்கு ஒதுக்கப்பட்ட முகாம் அலுவலக பகுதியிலும் உதயநிதி ஸ்டாலினுக்கு அலுவலகம் உள்ளது. இந்த 2 இடங்களிலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ள நிலையில், தற்போது போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. உதவி ஆய்வாளர் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட போலீஸார் ஆங்காங்கே பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ளனர்.
-th