ஐதராபாத்தில் கனமழையால் சாலைகளில் வெள்ளம்

தெலுங்கானா மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. கடந்த 3 நாட்களாக மாநிலத்தின் தலைநகரான ஐதராபாத் மாநகர பகுதியில் பலத்த மழை கொட்டி வருகிறது.

ஐதராபாத்தில் இடைவிடாத மழை பெய்து வருவதால் கடுமையான தண்ணீர் தேங்கி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. கனமழை காரணமாக, அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் திங்கட்கிழமை விடுமுறை அளிக்கப்பட்டது. ஐதராபாத் மாநகர பகுதியான சாய் நகர் கணேஷ் நகர் பகுதியில் 4 அடிக்கு மேல் தண்ணீர் தேங்கியுள்ளது. அந்த பகுதியில் சாலைகள் தண்ணீரில் மூழ்கியுள்ளதால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்துள்ளனர். பஞ்சவடி காலனி பகுதியில் ஏராளமான குடியிருப்பு வீடுகள் மூழ்கியுள்ளன.

அந்த பகுதியில் உள்ள தண்ணீரை பொக்லைன் எந்திரம் மூலம் வடிகால் அமைத்து அகற்றும் பணி நடந்து வருகிறது. தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஆறுகள் காட்டாறுகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதில் சிக்கியவர்கள் மீட்கப்பட்டு வருகின்றனர். தொடர்மழை காரணமாக தெலுங்கானா மாநிலத்திற்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் 3 நாட்கள் தொடர்ந்து மழை நீடிக்கும் என வானிலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

-mm