ஜி20 உச்சி மாநாடு தலைநகர் டெல்லியில் வரும் 9 மற்றும் 10-ம் தேதிகளில் நடைபெறுகிறது. இதில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக், பிரெஞ்ச் அதிபர் இம்மானுவல் மேக்ரான், ஜெர்மன் பிரதமர் ஓலப் ஸ்கால்ஸ், ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பனேஷி, ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா மற்றும் பிரேசில் அதிபர் லூயிஸ் இனாசியோ லூலா டா சில்வா ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.
ஆனால், சீன அதிபர் ஜி ஜின்பிங் பங்கேற்கவில்லை. அவருக்குப் பதில், சீன பிரதமர் லீ கியாங் கலந்து கொள்வார் என கடந்த திங்கள்கிழமை தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், சீன வெளியுறவுத் துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் மா நிங் நேற்று கூறும்போது, ‘‘சீனா – இந்தியா இடையிலான உறவு நிலையாக உள்ளது. இரு நாடுகள் இடையே பல்வேறு மட்டங்களில் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. சீனா – இந்திய உறவில் தொடர்ந்து முன்னேற்றம் ஏற்படுவது இரு நாட்டு மக்கள் நலனுக்கும் நல்லது. ஜி20 அமைப்புக்கு சீனா அதிக முக்கியத்துவம் அளித்து தீவிரமாக பங்கேற்கிறது’’ என்றார்.
சீனா கடந்த வாரம் தனது புதிய வரைபடத்தில் அருணாச்சல பிரதேசம், அக்ஷய் சின் ஆகிய பகுதிகளை இணைத்திருந்தது. இதற்கு இந்தியா கண்டனம் தெரிவித்திருந்த நிலையில் சீனா-இந்திய உறவு நிலையாக உள்ளது என அந்நாடு கூறியுள்ளது.
-th