ஜி-20 உச்சி மாநாடு 2023, பாரத் மண்டபத்தில் உலகத் தலைவர்களை வரவேற்ற பிரதமர் மோடி

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஜி-20 அமைப்பின் 18-வது உச்சி மாநாடு டெல்லி பிரகதி மைதானத்தில் உள்ள பாரத் மண்டபத்தில் இன்று (சனிக்கிழமை) கோலாகலமாக தொடங்கியது. மாநாட்டில் கலந்து கொள்ள வந்துள்ள உலகத் தலைவர்களை பாரத் மண்டபத்தில் உள்ள சர்வதேச கண்காட்சி மண்டபத்தில் வைத்து பிரதமர் மோடி வரவேற்றார். மாநாட்டுக்கு அழைக்கப்பட்ட அனைத்துத் தலைவர்களும் மாநாட்டுப் பகுதிக்கு வந்தடைந்தனர். கடைசியாக அமெரிக்க அதிபர் ஜோ பைடனை பிரதமர் மோடி வரவேற்றுச் சென்றார்.

காலம், முன்னேற்றம், தொடர்ச்சி ஆகியவைகளைக் குறிக்கும் 13ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கோனார்க் சின்னத்தின் பிரதி முன்பாக நின்று பிரதமர் உலகத் தலைவர்களை வரவேற்றார்.

ஜி-20 அமைப்புக்கு இந்தியா தலைமை தாங்கியுள்ள நிலையில், அந்த அமைப்பின் 18-வது உச்சிமாநாடு டெல்லி பிரகதி மைதானத்தில் உள்ள பாரத் மண்டபத்தில் இன்றும், நாளையும் நடைபெறுகிறது. இந்தியாவில் ஜி20 உச்சி மாநாடு நடப்பது இதுவே முதல்முறை. இம்மாநாட்டில் அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா உட்பட 30-க்கும் மேற்பட்ட நாடுகளின் தலைவர்கள், ஐரோப்பிய யூனியன் அதிகாரிகள், 14 சர்வதேச அமைப்புகளின் தலைவர்கள் பங்கேற்கின்றனர்.

மாநாட்டின் முதல் அமர்வு காலை 10.30 மணிக்கு மாநாட்டின் இந்த ஆண்டு தலைப்பான “ஒரு பூமி” என்ற தலைப்பில் நடக்கிறது. அதனைத் தொடர்ந்து மதிய உணவு நடைபெறுகிறது. அதன் பின்னர் இரண்டாவது அமர்வு “ஒரு குடும்பம்” என்ற தலைப்பில் பிற்பகல் 3 மணிக்கு தொடங்குகிறது. மாலை 4.45 முதல் 5.30 மணி வரை 45 நிமிடங்கள் பிரதமர் மோடி மற்றும் பிற நாட்டுத் தலைவர்களுடனான தனிப்பட்ட சந்திப்புக்களுக்கு (pull-aside meetings) ஒதுக்கப்பட்டுள்ளது. அதன் பின்னர் தலைவர்கள் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு ஏற்பாடு செய்திருக்கும ஜி20 விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொள்வார்கள்.

ஜி20 உச்சி மாநாட்டையொட்டி, பிரதமர் மோடி வெள்ளிக்கிழமை தனது சமூகவலைதளப் பதிவில் கூறியுள்ளதாவது:

‘உலகம் ஒரே குடும்பம்’: ஜி20 அமைப்பின் 18-வது உச்சி மாநாட்டை நடத்துவதில் இந்தியா மகிழ்ச்சியடைகிறது. பிரம்மாண்டமாக நடைபெறும் ஜி20 உச்சி மாநாடு, மக்களை மையமாக கொண்ட ஒருங்கிணைந்த வளர்ச்சியில் புதிய பாதையை வகுக்கும். உலகத் தலைவர்கள் பலர் பங்கேற்கும் இந்த உச்சிமாநாட்டில் ஆக்கப்பூர்வமான ஆலோசனைகள் நடைபெறும் என்று எதிர்பார்க்கிறேன்.

இந்தியா தலைமையில் நடைபெறும் ஜி20 உச்சி மாநாட்டின் கருப்பொருள் ‘வசுதைவ குடும்பகம் – ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம்’. இது ஒட்டுமொத்த உலகமும் ஒரே குடும்பம் என்ற உலகளாவிய பார்வையை வெளிப்படுத்துகிறது. இக்கருத்தை மையமாக கொண்ட மாநாட்டுக்கு தலைமை வகிப்பதில் பெருமை கொள்கிறேன். இதில் உலகமக்கள் சந்திக்கும் முக்கிய பிரச்சினைகள் குறித்து ஆலோசிக்கப்படும்.ஒருங்கிணைந்த, நடுநிலையான வளர்ச்சியை வலுப்படுத்துவது குறித்தும் ஆலோசிக்கப்படும்.

ஒருங்கிணைந்த வளர்ச்சி இலக்குகளுக்கான முன்னேற்றம், எதிர்காலத்துக்கான பசுமை வளர்ச்சி ஒப்பந்தம், 21-ம் நூற்றாண்டுக்கான பன்முக அமைப்புகளை வலுப்படுத்தும் நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம்.

தொழில்நுட்ப பரிமாற்றம், டிஜிட்டல் பொது கட்டமைப்பு போன்ற எதிர்கால துறைகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கிறோம். பாலின சமத்துவம், பெண்கள் முன்னேற்றம், உலக அமைதியை உறுதி செய்யவும் நாங்கள் ஒன்றிணைந்து பணியாற்றுகிறோம்.

மகாத்மா காந்தியின் அணுகுமுறை: பின்தங்கியவர்களுக்கும் சேவை செய்யும் மகாத்மா காந்தியின் அணுகுமுறையை பின்பற்றுவது முக்கியம். நட்புறவு, ஒத்துழைப்பை பலப்படுத்த பல நாட்டு தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளேன்.

இந்த உச்சி மாநாட்டுக்கு வரும் நமது விருந்தினர்கள், இந்தியாவின் உற்சாக விருந்தோம்பலால் மகிழ்ச்சி அடைவார்கள் என நம்புகிறேன். ஜி20 நிறைவு விழாவில், உலகத் தலைவர்கள் ஒரு குடும்பமாக இணைந்து ஆரோக்கியமான உலகுக்கு, ஒரே எதிர்காலத்துக்கான தங்களின் கூட்டு தொலைநோக்கை பகிர்ந்து கொள்வார்கள். இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

 

 

-th