ஊழல் வழக்கில் ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு கைது

ஊழல் வழக்கில் தெலுங்கு தேசக் கட்சித் தலைவரும், ஆந்திர முன்னாள் முதல்வருமான சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டார். ஊழல் குற்றச்சாட்டின் பேரில் குற்றவியல் புலனாய்வு காவல்துறையினர் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.

சந்திரபாபு நாயுடு முதல்வராக இருந்தபோது ஆந்திர திறன் மேம்பாட்டுக் கழகத்தில் ரூ.317 கோடி முறைகேடு நடந்ததாக எழுந்த புகாரின் பேரில் சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டார்.

ஆந்திர மாநிலம் ஞானபுரம் நந்தியாலா டவுன் பகுதியில் உள்ள ஆர்கே ஹாலில் இன்று (சனிக்கிழமை) காலை 6 மணியளவில் சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டார்.

இது தொடர்பாக சந்திரபாபு நாயுடுவுக்கு பொருளாதாரக் குற்றங்கள் தடுப்புப் பிரிவு எஸ்.பி. தனஞ்சயநாயுடு அளித்த நோட்டீஸில், “இந்த நோட்டீஸின் வாயிலாக தாங்கள் கைது செய்யப்படுவது தெரிவிக்கப்படுகிறது. ஜாமீனில் வெளிவர இயலாத சட்டப்பிரிவுகளின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளீர்கள்” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

என்னென்ன சட்டப்பிரிவுகள்? இந்திய தண்டனை சட்டப்பிரிவுகள் 120B (கிரிமினல் சதி), 420 (மோசடி) மற்றும் 465 (போலி ஆவணம் தயாரித்தல்) போன்ற பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளது. ஆந்திரப் பிரதேச சிஐடி சந்திரபாபு நாயுடுவுக்கு எதிராக ஊழல் தடுப்புச் சட்டத்தை பிறப்பித்துள்ளது. குற்றவியல் நடைமுறைச் சட்டம் 50 பிரிவுகள் (1) (2)ன் கீழ் அவருக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.

பேருந்துகள் நிறுத்தம்: ஆந்திர முன்னாள் முதல்வர் கைதை ஒட்டி அங்கு பதற்றமான சூழல் நிலவுகிறது. தமிழகத்தில் இருந்து ஆந்திரா செல்லும் பேருந்துகள் எல்லையில் நிறுத்தப்பட்டுள்ளன.

 

 

-th