கேரள மாநிலத்தில் பரவியுள்ள நிபா வைரஸ், வங்கதேச வகை யைச் சார்ந்தது என்று தெரிய வந்துள்ளது.
கேரளாவை சேர்ந்த ஒருவருக்கு 2018-ல் முதன் முறையாக நிபா வைரஸ் தாக்கியது. அப்போது 23 பேருக்கு நிபா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு 21 பேர் உயிரிழந்தனர். 2019, 2021-ம் ஆண்டுகளில் நிபா வைரஸால் பாதிக்கப்பட்டு 2 பேர் இறந்தனர். மனிதர்களிடமிருந்து மனிதர்களுக்கு இந்த வைரஸ் எளிதாக பரவும்.
இந்நிலையில் கோழிக்கோடு மாவட்டத்தில் கடந்த ஆகஸ்ட் 30-ம்தேதி ஒருவரும் கடந்த 11-ம்தேதி ஒருவரும் நிபா வைரஸ் காரணமாக உயிரிழந்துள்ளனர். அவர்களிடமிருந்து எடுக்கப்பட்ட மாதிரிகளை மகாராஷ்டிராவில் உள்ள புனே வைராலஜி ஆய்வகத்துக்கு சோதனைக்காக அனுப்பிய நிலையில், நிபா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.மேலும், உயிரிழந்தவர்களுடன் தொடர்பில் இருந்த இருவருக்கும் நிபா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, 4 பேருடன் தொடர்பில் இருந்த சுகாதாரப் பணியாளர்கள் உள்பட 168 பேர் கண்டறியப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். நிலைமையைக் கண்காணிக்க மாநில அரசுக்கு துணையாக மத்திய நிபுணர்கள் குழுவும் கேரளத்துக்கு விரைந்துள்ளது.
இதைத் தொடர்ந்து, கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள 7 பஞ்சாயத்துகளை தனிமைப்படுத்தி கட்டுப்பாட்டு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த பகுதிகளில் உள்ள மருந்து கடைகள், வருவாய்அலுவலங்கள் தவிர மற்ற கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. மக்கள் வெளியே வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், வெளியூர்களுக்கு செல்லும்சாலைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. பள்ளிகள் மற்றும்அங்கன்வாடிகளை மூடவும் ஆன்லைன் மூலம் வகுப்பெடுக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நிபா வைரஸ் பாதிப்பால் காய்ச்சல் ஏற்பட்ட ஒரு நோயாளியிடமிருந்து, அவருக்கு அருகில் நெருக்கமாக இருக்கும் குடும்பத்தினர், நண்பர்களுக்கும் இந்த வைரஸ் பரவலாம். நோயாளியின் உடல் திரவங்கள் (உமிழ்நீர், ரத்தம், சிறுநீர்) மூலம் மற்றவர்களுக்கு இந்நோய் பரவலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது கேரளாவில் பரவியுள்ள நிபா வைரஸானது, வங்கதேசவகையைச் சார்ந்தது என்றும், இந்த வைரஸ் பாதிப்பால் உயிரிழப்பு விகிதம் அதிகம் என்றும் கூறப்பட்டுள்ளது.
இதையடுத்து மாநிலம் முழுவதும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும், சுகாதாரத்துறை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர் என்றும் கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்தார்.
இந்நிலையில் நேற்று புனேவிலுள்ள நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் வைரலாஜி (என்ஐவி) குழுவினர் கோழிக்கோடு மருத்துவக் கல்லூரிக்கு வந்தனர். அதேபோல் சென்னையிலிருந்தும் தொற்றுநோய் தடுப்பு நிபுணர்கள் கேரளாவுக்கு வந்துள்ளனர். கோழிக்கோடு மாவட்டத்திலிருந்து யாரும் வெளியூர் செல்லக்கூடாது என்று ஆட்சியர் ஏ.கீதா உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பான அறிவிப்பு ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வெளியிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா கூறும்போது, “நிபா வைரஸ் பரவல் தொடர்பாக கேரள சுகாதாரத் துறை அமைச்சர் வீணா ஜார்ஜுடன் பேசினேன். இந்த வகை வைரஸ், வவ்வால்களிடமிருந்து பரவுவதாகத் தெரிகிறது. இதுகுறித்து சுகாதாரத்துறை அமைச்சகம், வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்கியுள்ளது’’ என்றார்.
இதேபோல் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை யும் எடுக்குமாறு சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு கேரள முதல் வர் பினராயி விஜயன் உத்தரவிட்டுள்ளார்.
அனைவரும் சுகாதாரத்துறை அமைச்சக ஊழியர்கள், போலீஸாரின் உத்தரவுகளை கடைபிடிக்க வேண்டும் என்றும், அவர்களுக்கு முழு ஒத்துழைப்பு தரவேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
-th