கனடாவில் வாழும் இந்தியர்கள், மாணவர்கள் உள்பட அனைவரும் எச்சரிக்கையுடன் இருக்கும்படி வெளியுறவு அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் எக்ஸ் (ட்விட்டர்) தளத்தில், “கனடாவில் அதிகரித்து வரும் இந்திய விரோத செயல்கள் மற்றும் அரசே மன்னித்துவிட்ட வெறுப்புக் குற்றங்கள், கிரிமினல் வன்முறைகள் ஆகியனவற்றைக் கருத்திக் கொண்டு கனடாவில் உள்ள அனைத்து இந்தியர்கள் மற்றும் அங்கு செல்லவிருக்கும் இந்தியர்கள் உச்சபட்ச பாதுகாப்புடன் இருக்கும்படி எச்சரிக்கிறோம்.
அண்மைக் காலமாக அங்குள்ள இந்தியர்கள், குறிப்பாக இந்திய எதிர்ப்பு கொள்கைகளை எதிர்க்கும் இந்திய தூதரக அதிகாரிகள் குறிவைக்கப்படுகின்றனர். அதனால், கனடாவில் அச்சுறுத்தல் உள்ள பகுதிகளுக்கு இந்தியர்கள் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கப்படுகின்றனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, இரு நாடுகளுக்கும் இடையே நிலவும் மோதலைக் கருத்தில் கொண்டு, இந்தியாவில் வசிக்கும் தனது குடிமக்களுக்கு கனேடிய அரசு சில விஷயங்களை அறிவுறுத்தியது. கனடா அரசின் இணையதளத்தில், “பயங்கரவாத தாக்குதல்களின் அச்சுறுத்தல் காரணமாக இந்தியாவில் அதிக அளவு எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
சில பாதுகாப்புக் கவலைகள் உள்ளன. நிலைமை விரைவாக மாறக்கூடும். எனினும், மிகவும் எச்சரிக்கையாக இருங்கள், உள்ளூர் ஊடகங்களைக் கண்காணித்து உள்ளூர் அதிகாரிகளின் வழிமுறைகளைப் பின்பற்றுங்கள்” என்று அறிவுறுத்தியது. தற்போது இந்தியா கனடா வாழ் இந்தியர்களை பாதுகாப்புடன் இருக்கும்படி எச்சரித்துள்ளது.
-th