உறுப்பு தானம் செய்வோருக்கு அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு – முதல்வர் ஸ்டாலின்

இறக்கும் முன் உறுப்பு தானம் செய்வோரின் இறுதிச்சடங்குகள் இனி அரசு மரியாதையுடன் மேற்கொள்ளப்படும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் பகிர்ந்துள்ள பதிவில், “உடல் உறுப்பு தானத்தின் மூலம் நூற்றுக்கணக்கான நோயாளிகளுக்கு வாழ்வளிக்கும் அரும்பணியில் நாட்டின் முன்னணி மாநிலமாகத் தமிழ்நாடு தொடர்ந்து விளங்கி வருகின்றது.

குடும்ப உறுப்பினர்கள் மூளைச்சாவு நிலையை அடைந்த துயரச் சூழலிலும், அவர்களின் உடல் உறுப்புகளைத் தானமாக அளித்திட முன்வரும் குடும்பங்களின் தன்னலமற்ற தியாகங்களால்தான் இந்தச் சாதனை சாத்தியமாகியுள்ளது.

தம் உறுப்புகளை ஈந்து, பல உயிர்களைக் காப்போரின் தியாகத்தினைப் போற்றிடும் வகையில், இறக்கும் முன் உறுப்பு தானம் வழங்குவோரின் இறுதிச்சடங்குகள் இனி அரசு மரியாதையுடன் மேற்கொள்ளப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.

உறுப்பு தானம் – பதிவு செய்வது எப்படி? உடல் உறுப்பு தானம் செய்யவிருப்பம் உள்ளவர்கள் முதலில் தனது விருப்பத்தை குடும்பத்தினருக்கு தெரிவிக்க வேண்டும். பின்னர், தமிழக அரசின் உடல் உறுப்பு தானத்துக்காகப் பதிவு செய்யக்கூடிய இணையதளத்தில் பதிந்து, அதற்கான அடையாள அட்டையையும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

மேலும், மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகளிலும் பதிவு செய்து கொள்ளலாம். இதில் பதிவு செய்தவர்கள் கண்டிப்பாக உறுப்பு தானம் செய்ய வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. தானம் செய்தவர் இயற்கையாக இறந்தாலோ அல்லது மூளைச்சாவு அடைந்தாலோ அவரது குடும்பத்தினர்களின் அனுமதியுடன்தான் உறுப்புகள் தானமாகப் பெறப்படும்.

உறுப்பு தானத்தை முறைப்படுத்துவதற்காக தமிழக அரசு கடந்த 2008-ல் உறுப்பு தானத் திட்டத்தை தொடங்கியது. இத்திட்டத்தில் இணைந்துள்ள மருத்துவமனைகளில் யாராவது மூளைச் சாவு ஏற்பட்டு, அவரது உறுப்புகளை தானம் செய்ய குடும்பத்தினர் முன்வந்தால், தமிழ்நாடு உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை ஆணையம் வழியாக முன்னுரிமை வரிசை அடிப்படையில் தேவைப்படும் நோயாளிகளுக்கு, அவர்கள் பதிவுசெய்த மருத்துவமனைக்கு வழங்கப்படும்.

இதில், மூளைச்சாவு அடைந்தவர் சிகிச்சை பெற்ற மருத்துவமனை, ஏதாவது ஒரு உறுப்பை மட்டும் (உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு அனுமதி பெற்றிருந்தால்), அங்கு உறுப்பு தானம் கேட்டு பதிவு செய்த ஒருவருக்கு வழங்க முடியும்.

மறுவாழ்வு அளிக்கலாம்: உயிருடன் இருக்கும் ஒருவர், அரசின் விதிகளுக்கு உட்பட்டுதனது குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கு (அதாவது அப்பா, அம்மா, சகோதரர், சகோதரி, மகன், மகள்,கணவன், மனைவி ஆகிய 8 உறவுகளுக்குள் மட்டும்) 2 சிறுநீரகங்களில் ஒன்று, கல்லீரலின் ஒருபகுதியை தானமாக வழங்க முடியும்.

அதேபோல, மூளைச்சாவு அடைந்தவர்களிடமிருந்து கண், இதயம், நுரையீரல், கல்லீரல், கிட்னி, கணையம், எலும்பு, தோல்உள்ளிட்ட உறுப்புகளை தானமாகப்பெறலாம். இதன்மூலம் அதிகபட்சமாக 12 பேருக்கு மறுவாழ்வு அளிக்க முடியும்.

 

 

-th