இந்தியா உடனான தூதரக மோதலால் இரு நாட்டு ராணுவ உறவு பாதிக்காது: கனடா ராணுவ துணைத் தளபதி

இந்தியா – கனடா இடையேயான தூதரக மோதல், இரு நாட்டு ராணுவ உறவில் பாதிப்பை ஏற்படுத்தாது என்று இந்தியா வந்துள்ள கனடா ராணுவ துணைத் தளபதி மேஜர் ஜெனரல் பீட்டர் ஸ்காட் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் நேற்று தொடங்கிய இந்தோ – பசிபிக் ராணுவத் தலைவர்களின் 3 நாள் மாநாட்டில் கனடா ராணுவத்தின் துணை தளபதி மேஜர் ஜெனரல் பீட்டர் ஸ்காட் பங்கேற்றுள்ளார். மாநாட்டின் இடையே செய்தியாளர்களிடம் பேசிய பீட்டர் ஸ்காட், “ஜஸ்டின் ட்ரூடோ என்ன கூறினார் என்பதை நான் நன்கு அறிவேன். நிஜார் கொலை வழக்கில் இந்திய அரசு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று அவர் கோரி இருக்கிறார். ஆனால், இந்த விவகாரம் இந்தோ – பசிபிக் மாநாட்டில் எங்களுக்கு எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. ராணுவ ரீதியிலான உறவுகளை மேம்படுத்தவே நாங்கள் இங்கு இருக்கிறோம். அந்தப் பிரச்சினையை அரசாங்கங்கள் அவர்களுக்குள்ளாகவே சமாளித்துக் கொள்வார்கள்.

இந்தோ – பசிபிக் ராணுவத் தளபதிகளின் மாநாட்டின் ஓர் அங்கமாக நாங்கள் இங்கு இருப்பதற்கு நன்றி உள்ளவர்களாக இருக்கிறோம். இந்தோ – பசிபிக் பிராந்திய நட்பு நாடுகளுடன் பயிற்சி மேற்கொள்வதற்கான வாய்ப்புகளை கனடா எப்போதும் மதிக்கிறது. இந்த மாநாட்டில் பங்கேற்றிருப்பதன் மூலம் மற்ற நாடுகளின் தலைவர்களைச் சந்திக்கவும், அந்த நாடுகளின் ஆர்வங்களை அறிந்து கொள்ளவும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்த மாநாட்டில் பங்கேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம். மாநாட்டை நடத்தும் இந்தியாவுக்கு எங்கள் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

இந்தியா – கனடா ராணுவங்களுக்கு இடையே பயிற்சிகளை பரிமாரிக்கொள்வது, அனுபவங்களை பரிமாறிக்கொள்வது ஆகியவற்றின் மூலம் இரு நாடுகளும் ஒன்றிடம் இருந்து மற்றொன்று கற்றுக்கொள்ள முடியும்” என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக, கனடாவில் காலிஸ்தான் பிரிவினைவாதி ஹர்தீப் சிங் நிஜார் கடந்த ஜூன் மாதம் மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டார். இதில், இந்திய முகவர்களுக்கு தொடர்பு இருப்பதாக கனடா பிரதமர் ட்ரூடோ சமீபத்தில் குற்றம்சாட்டினார். அதன் தொடர்ச்சியாக, கனடா வெளியுறவுத் துறை அங்குள்ள இந்திய தூதரை வெளியேறுமாறு உத்தரவிட்டது. கனடாவுக்கு பதிலடி தரும் வகையில், கனடா தூதரக அதிகாரி 5 நாட்களில் இந்தியாவைவிட்டு வெளியேற வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டது. இதன் காரணமாக, இரு நாட்டு உறவு பாதிக்கப்பட்டுள்ளது. கனடாவில் உள்ள இந்தியர்கள் கவனமாக, பாதுகாப்பாக இருக்குமாறு மத்திய வெளியுறவு அமைச்சகம் அறிவுறுத்தியது. கனடா நாட்டவர்களுக்கு விசா வழங்கும் சேவையையும் இந்தியா நிறுத்தி வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

 

-th