கர்நாடகாவில் இன்று முழு அடைப்பு போராட்டம்: தமிழ‌ர்கள் வசிக்கும் பகுதிகளில் பாதுகாப்பு அதிகரிப்பு

தமிழகத்துக்கு காவிரி நீர் திறக்கப்படுவதை கண்டித்து கர்நாடகாவில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெறுகிறது. இதனால் தமிழகஅரசு பேருந்துகளும், வாகனங்களும் எல்லையிலேயே தடுத்து நிறுத்தப்படும் என தெரிகிறது.

டெல்லியில் கடந்த 26-ம் தேதி நடந்த காவிரி ஒழுங்காற்று குழுவின் 87-வது கூட்டத்தில், “த‌மிழகத்தின் குறுவை சாகுபடிக்காக கர்நாடக அரசு அடுத்த 15 நாட்களுக்கு காவிரியில் விநாடிக்கு 3000 கன அடிநீரை திறந்துவிட வேண்டும்”என பரிந்துரை செய்தது.

இதற்கு கர்நாடக பாஜக, மதசார்பற்ற ஜனதா தளம், ஆம் ஆத்மி மற்றும் கன்னட அமைப்பினர் கடும்எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். விவசாய சங்கத்தினர், பெங்களூரு, மைசூரு, மண்டியா ஆகிய இடங்களில் தொடர்ந்து போராட்டம் நடத்திவருகின்றனர். இந்நிலையில் முதல்வர் சித்தராமையா, காவிரி ஒழுங்காற்று குழுவின் பரிந்துரைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் முறையிடப் போவதாக தெரிவித்துள்ளார்.

தமிழகத்துக்கு காவிரி நீரை திறந்துவிடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வெள்ளிக்கிழமை (இன்று) கர்நாடகா முழுவதும் முழு அடைப்புபோராட்டம் நடத்தப்படும் என்று கன்னட சலுவளி கட்சியின் தலைவர்வாட்டாள் நாகராஜ் தெரிவித்துள்ளார். இதற்கு கன்னட அமைப்புகளின் கூட்டமைப்பு, கர்நாடக விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு, கர்நாடக திரைப்பட வர்த்தக கூட்டமைப்பு, தனியார் வாகன உரிமையாளர்கள் சங்கம் உட்பட 150க்கும் மேற்பட்ட அமைப்புகள் ஆதரவு தெரிவித்துள்ளன.

இதனால் பெங்களூரு, மண்டியா ஆகிய மாவட்டங்களில் தனியார் பள்ளி, கல்லூரிகள் விடுமுறை அறிவித்துள்ளன. அன்றைய தினம் அறிவிக்கப்பட்டிருந்த தேர்வுகளை பெங்களூரு பல்கலைக்கழகம் சனிக்கிழமைக்கு ஒத்தி வைத்துள்ளது. தனியார் நிறுவனங்கள் ஊழியர் களை வீட்டில் இருந்தே பணியாற்றுமாறு கோரியுள்ளன. பெங்களூருவில் சனிக்கிழமை நள்ளிரவு வரை 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்தப் போராட்டம் காரணமாக தமிழகம் கர்நாடகா இடையேயான போக்குவரத்து பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது. கர்நாடகாவுக்கு இயக்கப்படும் தமிழக அரசு மற்றும் தனியார் பேருந்துகள் ஓசூர்,பண்ணாரி, மாதேஸ்வரன் மலைஉள்ளிட்ட இடங்களில் உள்ள சோதனைச் சாவடிகள் வரை மட்டுமேஇயக்கப்படும் என போக்குவரத்து துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

பெங்களூருவில் தமிழர்கள் அதிகமாக வாழும் சிவாஜிநகர், அல்சூர், டேனரி சாலை, ஆஸ்டின் டவுன், ராமபுரம் உள்ளிட்ட இடங்களில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மண்டியா, மைசூரு, சிக்கமகளூரு ஆகியஇடங்களில் தமிழர்கள் வசிக்கும் பகுதிகளுக்கும் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

மேலாண்மை ஆணைய கூட்டம்: காவிரி மேலாண்மை ஆணை யத்தின் அவசர‌க் கூட்டம் அதன் தலைவர் எஸ்.கே.ஹல்தர் தலைமையில் இன்று டெல்லியில் ந‌டைபெறுகிறது. குறுவை சாகுபடிக்கு கூடுதலாக நீரை திறந்துவிட இந்த கூட்டத்தில் தமிழக அரசு தரப்பில் கோரிக்கை வைக்கப்படும் என்று தெரிகிறது.

 

 

 

-th