அக்டோபர் 14 வரை ஏர் இந்தியா சேவை ரத்து, இஸ்ரேலில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தல்

இஸ்ரேல் மீது ஹமாஸ் தீவிரவாதிகள் திடீர் தாக்குதலை தொடங்கியதையடுத்து இருதரப்புக்கும் இடையே போர் மூண்டுள்ளது. இதையடுத்து இஸ்ரேலில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளது.

இதுகுறித்து, மத்திய வெளியுறவுத்துறை இணையமைச்சர் முரளிதரன் நேற்று அளித்த பேட்டியில், ‘‘இஸ்ரேலில் உள்ள இந்திய தூதரகம் அங்குள்ள இந்தியர்களுக்கு ஏற்கெனவே அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. அவர்கள் இந்திய தூதரகத்தை எப்போதும் தொடர்பு கொள்ளலாம். இஸ்ரேலில் சிக்கியுள்ள இந்தியர்களுக்கு அனைத்து உதவிகளையும் இந்திய தூதரகம் அளிக்கும்’’ என்றார்.

ஏர் இந்தியா சேவை ரத்து: ஏர் இந்தியா விடுத்துள்ள செய்தியில், ‘‘ பயணிகளின் பாதுகாப்பு கருதி டெல்லி – டெல் அவிவ் இடையே வாரத்துக்கு 5 நாள் இயக்கப்படும் ஏர் இந்தியா விமான சேவைகள் அக்டோபர் 14-ம் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்த காலகட்டத்தில் முன்பதிவு செய்துள்ள பயணிகளுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் ஏர் இந்தியா வழங்கும்.

இஸ்ரேல் பெண் சுட்டுக் கொலை: காசா எல்லை வழியாக இஸ்ரேலுக்குள் நேற்று முன்தினம் ஊடுருவிய ஹமாஸ் தீவிரவாதிகள் ரோட்டில் சென்ற பலரை சுட்டுக் கொன்றனர். பலரை பிணைக் கைதிகளாக பிடித்து காசா பகுதிக்குள் கொண்டு சென்றனர். சில தீவிரவாதிகள் இஸ்ரேலியர்களின் வீடு புகுந்து அங்கிருந்தவர்களை சிறைபிடித்தனர். அப்போது அந்த வீட்டில் இருந்த இளம் பெண் ஒருவரை, அவரது குடும்பத்தினரின் கண் முன்பே, ஹமாஸ் தீவிரவாதிகள் சுட்டுக் கொன்றனர். ‘அந்தப் பெண் சொர்க்கத்துக்கு சென்றுவிட்டதாக’ அவரது குடும்பத்தினரிடம் தீவிரவாதிகள் கூறியுள்ளனர். இந்த வீடியோ காட்சிகளை இஸ்ரேல் பத்திரிகையாளர் ஹனன்யா நப்தாரி என்பவர் சமூக ஊடகத்தில் பகிர்ந்துள்ளார். இது மனிதநேயத்துக்கு எதிரான குற்றம் என்றும், இந்த விஷயத்தில் உலக தலைவர்கள் தலையிட வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

எகிப்தில் 3 பேர் சுட்டுக் கொலை: எகிப்திலுள்ள பிரபலமான சுற்றுலா மையமாக அலெக்சான்டிரியா நகரம் உள்ளது. இங்கு நாள்தோறும் ஏராளமான உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்றனர்.

இந்நிலையில் அலெக்சான்டிரியா நகரிலுள்ள பிரபலமான சுற்றுலா மையமான பாம்ப்பே பில்லர் பகுதிக்கு நேற்று ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்திருந்தனர். அப்போது அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த எகிப்தைச் சேர்ந்த போலீஸ்காரர் ஒருவர் துப்பாக்கியால் திடீரென சுடத் தொடங்கினார்.

இதில் இஸ்ரேலை சேர்ந்த 2 சுற்றுலாப் பயணிகள், எகிப்தை சேர்ந்த ஒருவர் என மொத்தம் 3 பேர் உயிரிழந்தனர் என்று எகிப்து உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதையடுத்து துப்பாக்கியால் சுட்ட நபரை போலீஸார் மடக்கிப் பிடித்து கைது செய்துள்ளனர்.

இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இஸ்ரேல் மாணவி கடத்தல்: ஹமாஸ் தீவிரவாதிகள் நேற்று முன்தினம் இஸ்ரேலில் புகுந்தபோது, இசைத் திருவிழா நடந்த இடம் ஒன்றுக்கு சென்றுள்ளனர். அங்கு துப்பாக்கி சூடு நடத்தியும், ராக்கெட் குண்டுகளை வீசியும் பீதி ஏற்படுத்தினர். அப்போது இசைத் திருவிழாவில் பங்கேற்ற மாணவி நோவா அர்கமணி என்பவரை தீவிரவாதிகள் பிடித்து சென்று அவர்களின் இரு சக்கர வாகனத்தில் ஏறும்படி வற்புறுத்தியுள்ளனர். அப்போது அந்த மாணவியை காப்பாற்ற முயன்ற அவரது நண்பர் அவிநாதன் என்பவரை தீவிரவாதிகள் கடுமையாக தாக்கினர். தற்போது அவி நாதனையும் காணவில்லை என அவரது சகோதரர் தெரிவித்துள்ளார். இவர்களை தேடும் முயற்சியில் இஸ்ரேல் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டுள்ளனர்.

இரு தரப்பினரும் அமைதி காக்க சீனா வேண்டுகோள்: சீன வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ஒருவர் நேற்று அளித்த பேட்டியில், ‘‘பாலஸ்தீனம், இஸ்ரேல் இடையே ஏற்பட்டுள்ள பதற்றம் கவலையளிக்கிறது. இரு தரப்பினரும் அமைதி காக்க வேண்டும். இரு தரப்பினர் இடையே மோதல் மீண்டும் ஏற்பட்டுள்ளது, அமைதி பேச்சுவார்த்தையின் நீண்ட தேக்கநிலை நீடிக்க முடியாது என்பதை காட்டுகிறது. சுதந்திரமான பாலஸ்தீனத்தை ஏற்படுத்தி, இருதரப்பு தீர்வை அமல்படுத்துவதான் மோதலில் இருந்து விடுபட வழிவகுக்கும். பாலஸ்தீனம் மற்றும் இஸ்ரேல் இடையே மீண்டும் அமைதி பேச்சு தொடர சர்வதேச நாடுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என தெரிவித்துள்ளார்.

மேகாலயாவை சேர்ந்த 27 பேர் இஸ்ரேலில் இருந்து மீட்பு: இந்தியாவின் மேகாலயா மாநிலத்தை சேர்ந்த 27 பேர் இஸ்ரேலுக்கு ஆன்மிக சுற்றுலா சென்றிருந்தனர். போர் காரணமாக இஸ்ரேல், இந்தியா இடையிலான விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டு உள்ளன.

இதன்காரணமாக மேகாலயாவை சேர்ந்த 27 பேரும் இஸ்ரேலில் சிக்கித் தவித்தனர். அவர்களை மீட்க நடவடிக்கை எடுக்குமாறு மேகாலயா முதல்வர் கான்ராட் சங்மா மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்தார். இதைத் தொடர்ந்து இஸ்ரேலில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் விரைந்து செயல்பட்டு 27 இந்தியர்களையும் அண்டை நாடான எகிப்துக்கு அனுப்பி வைத்தனர்.

இதுதொடர்பாக மேகாலயா முதல்வர் கான்ராட் சங்மா சமூக வலைதளத்தில் நேற்று வெளியிட்ட பதிவில், “மத்திய வெளியுறவுத் துறையின் முயற்சியால் மேகாலயாவை சேர்ந்த 27 பேரும் பத்திரமாக எகிப்தை சென்றடைந்துள்ளனர்” என்று தெரிவித்துள்ளார். அவர்கள் 27 பேரும் இந்தியா திரும்புவர் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

 

 

 

-ht