இந்தியா – தான்சானியா இடையே 6 ஒப்பந்தங்கள் கையெழுத்து

பிரதமர் நரேந்திர மோடி, தான்சானியா அதிபர் சாமியா சுலுஹூ ஹசன் முன்னிலையில், இரு நாடுகளுக்கு இடையே 6 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளன.

குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவின் அழைப்பின் பேரில், தான்சானியா அதிபர் சாமியா சுலுஹு ஹசன் மூன்று நாள் பயணமாக கடந்த 8ம் தேதி இந்தியா வந்தார். அவருடன் அந்நாட்டு அரசு அதிகாரிகள், வர்த்தக சமூக உறுப்பினர்கள் உள்ளிட்ட உயர்மட்ட தூதுக்குழுவினரும் வந்தனர். தான்சானியா அதிபருக்கு குடியரசுத் தலைவர் மாளிகையில் நேற்று சம்பிரதாய வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதையடுத்து, தான்சானியா அதிபரும் இந்திய பிரதமரும் இருதரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்தினர். இதன் தொடர்ச்சியாக, இரு நாடுகளுக்கும் இடையே 6 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. 1. இந்தியாவின் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் மற்றும் தான்சானியாவின் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் ஆகியவற்றுக்கு இடையே டிஜிட்டல் தீர்வுகளைப் பகிர்ந்து கொள்ளும் ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம். 2. இந்திய கடற்படைக்கும் தான்சானியா கப்பல் கழகத்திற்கும் இடையே வெள்ளை கப்பல் தகவல்களைப் பகிர்வதற்கான தொழில்நுட்ப ஒப்பந்தம். 3. 2023-2027 ஆம் ஆண்டுகளில் இந்தியா – தான்சானியா இடையிலான கலாச்சார பரிமாற்றத் திட்டம். 4. தான்சானியாவின் தேசிய விளையாட்டு கவுன்சில் மற்றும் இந்திய விளையாட்டு ஆணையம் இடையே விளையாட்டுத் துறையில் ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம். 5. இந்திய துறைமுகங்கள் அமைச்சகத்தின் கீழ் உள்ள ஜவஹர்லால் நேரு துறைமுக ஆணையத்திற்கும் தான்சானியா முதலீட்டு மையத்திற்கும் இடையே தான்சானியாவில் ஒரு தொழில் பூங்காவை அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம். 6. கொச்சின் கப்பல் கட்டும் தளம் மற்றும் தான்சானியாவின் மரைன் சர்வீசஸ் கம்பெனி லிமிடெட் இடையே கடல்சார் தொழில்துறை ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்.

பிரதமர் நரேந்திர மோடி, தான்சானியா அதிபர் சாமியா சுலுஹு ஹசன் முன்னிலையில் இந்த ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இதையடுத்து, கூட்டறிக்கை வெளியிடப்பட்டது. அதன் விவரம்: “இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தவும், பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை விரிவுபடுத்தவும், இந்திய-தான்சானியா உறவை உத்திசார் கூட்டு ஒத்துழைப்பு நிலைக்கு உயர்த்துவதாக இரு தலைவர்களும் அறிவித்தனர். கடல்சார் பாதுகாப்பு, பாதுகாப்பு ஒத்துழைப்பு, வளர்ச்சி, வர்த்தகம் மற்றும் முதலீடு போன்ற விவகாரங்களில் இரு நாடுகளும் இணைந்து செயல்பட இது உதவும் என்று இரு தரப்பினரும் குறிப்பிட்டனர்.

வெளியுறவு அமைச்சர்கள் மட்டத்திலான கூட்டு ஆணைக்குழு செயல்முறை வாயிலாக உயர்மட்ட அரசியல் கலந்துரையாடல்களை தொடர்வதற்கும், தலைவர்களுக்கிடையிலான இருதரப்பு சந்திப்புக்களுக்கும் இரு தரப்பினரும் இணக்கம் தெரிவித்தனர். 2023 ஜூன் 28 மற்றும் 29 தேதிகளில் அருஷாவில் நடைபெற்ற 2 வது கூட்டு பாதுகாப்பு ஒத்துழைப்புக் குழு கூட்டம் வெற்றிகரமாக நடைபெற்றது குறித்து இரு தலைவர்களும் திருப்தி தெரிவித்தனர். 2022 மே 31 மற்றும் 2023 அக்டோபர் 2 ஆகிய தேதிகளில் தார் எஸ் சலாமில் இரண்டு முறை பாதுகாப்பு கண்காட்சியை வெற்றிகரமாக நடத்தியதைக் கருத்தில் கொண்டு, இதில் பல இந்திய பாதுகாப்பு நிறுவனங்கள் பங்கேற்றன. இரு தரப்பினரும் பாதுகாப்புத் துறையில் ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதில் ஆர்வத்தை வெளிப்படுத்தினர்.

 

 

-ht