சிறுபான்மை மாணவர்களுக்கான அனைத்து கல்வி உதவித் திட்டங்களையும் மீண்டும் அமல்படுத்த வேண்டும்

சிறுபான்மை மாணவர்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்ட அனைத்து கல்வி உதவித் திட்டத்தையும் மீண்டும் அமல்படுத்திட வேண்டும் என மத்திய அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

அக்கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழு கூட்டம், மாநில செயற்குழு உறுப்பினர் கே.சாமுவேல்ராஜ் தலைமையில் சென்னையில் 2023 அக்டோபர் 13, 14 ஆகிய தேதிகளில் நடைபெற்று வருகிறது. இக்கூட்டத்தில் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள் பிரகாஷ் காரத், ஜி.ராமகிருஷ்ணன், மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர்கள் பி.சம்பத், உ.வாசுகி, பெ.சண்முகம் உள்ளிட்டு மாநில செயற்குழு, மாநிலக்குழு உறுப்பினர்கள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் கலந்துகொண்டனர். இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் பின்வருமாறு:

இடதுசாரி கட்சிகளின் ஆதரவோடு அமைந்திருந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசாங்கம் சச்சார் குழு பரிந்துரையின் அடிப்படையில் சிறுபான்மை மக்களின் பின்தங்கிய நிலையை போக்குவதற்காக பல்வேறு பரிந்துரைகளை முன்வைத்தது. அதில் மிக, மிக முக்கியமானது கல்வி பயிலும் சிறுபான்மை மாணவ, மாணவிகளுக்கு கல்வி கட்டணங்கள் மற்றும் விடுதி செலவுகளுக்கான உதவித் தொகைகள் அளிக்கப்பட்டு வந்தது. பாஜக அரசாங்கம் ஒன்றிய ஆட்சிப் பொறுப்பை ஏற்ற பிறகு, உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கான மௌலானா அபுல் கலாம் ஆசாத் ஃபெலோஷிப் கடந்தாண்டிலிருந்து முற்றிலுமாக நிறுத்தப்பட்டு விட்டது.

அதேபோல, போஸ்ட் மெட்ரிக் ஸ்காலர்ஷிப், பிரி மெட்ரிக் ஸ்காலர்ஷிப்பில் 1 முதல் 8ம் வகுப்பிற்கான கல்வி உதவித் தொகை நிறுத்தப்பட்டு விட்டது. வெளிநாட்டில் பயிலும் சிறுபான்மை மாணவர்களுக்கு கல்விக்காக வழங்கப்படும் கடனுக்கான வட்டிக்கு மானியம் அளிக்கப்பட்டு வந்தது. அதையும் பாஜக தலைமையிலான அரசாங்கம் கடந்தாண்டு நிறுத்தி விட்டது. இந்த திட்டங்களிலிருந்து சிறுபான்மை மாணவியருக்கான பேகம் ஹஸ்ரத் மஹால் கல்வி உதவி தொகை திட்டம். இந்த ஆண்டு முதல் இந்த திட்டத்தையும் கைவிடுவதாக ஒன்றிய அரசு அறிவித்திருக்கிறது. இது வன்மத்தோடு சிறுபான்மை மாணவர்களின் கல்வியை குறிவைத்து பாஜக அரசினால் நடத்தப்படும் தாக்குதலாகும்.

இடஒதுக்கீடு, கல்வி உதவித் தொகை என்று எதுவும் ஒடுக்கப்பட்ட மாணவர்களுக்கு இருக்கக் கூடாது என்பதை நோக்கமாக கொண்டே பாஜக அரசாங்கம் செயல்பட்டு வருகிறது. கடந்த காலத்தில் இந்த கல்வி உதவித் தொகைகள் கல்வி நிலையங்கள் மூலம் கொடுக்கப்பட்டு வந்தன. இதனால் கல்வி உதவித்தொகை கிடைப்பதை உத்தரவாதம் செய்யும் பொறுப்பு கல்வி நிலையங்களுக்கும் இருந்தது. சமையல் எரிவாயுவிற்கான மானியத்தை முற்றிலுமாக இல்லாமல் செய்வதற்கு முன்பு பாஜக அரசாங்கம் எப்படி நேரடி பணப்பரிமாற்றம் என்று சொல்லி ஏமாற்றை ஆரம்பித்ததோ, அதேபோன்று சிறுபான்மை மாணவர்களின் கல்வி உதவித் தொகையிலும் அத்தகைய நயவஞ்சகத்துடனேயே நடந்து கொள்கிறது.

இது பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பட்டியலின – பழங்குடி மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகையை இல்லாமல் செய்வதற்கான முன்னோட்டமாகும். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு இந்த நயவஞ்சக நடவடிக்கையை வன்மையாக கண்டிக்கிறது. ஜனநாயக இயக்கங்கள் இந்த நடவடிக்கைக்கு எதிராக குரலெழுப்ப வேண்டுமென்றும், ஒன்றிய அரசு உடனடியாக நிறுத்தி வைக்கப்பட்ட அனைத்து கல்வி உதவித் திட்டங்களையும் மீண்டும் அமல்படுத்த வேண்டுமென்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மாநிலக்குழு வலியுறுத்துகிறது என்று அந்தத் தீர்மானங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

-ht