மனிதகுலத்துக்கு எதிரானது பயங்கரவாதம்; மனிதநேய அணுகுமுறையே தேவை – பிரதமர் மோடி

ஜனநாயகத்தின் தாயாகவும், உலகின் மிகப் பெரிய ஜனநாயகமாகவும் இந்தியா திகழ்வதாக பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார். மேலும், பயங்கரவாதம், அது எங்கு நடந்தாலும் அல்லது எந்த காரணத்திற்காக இருந்தாலும், அது மனிதகுலத்திற்கு எதிரானது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜி 20 நாடாளுமன்ற சபாநாயகர்களின் 9-வது உச்சிமாநாடு புதுடெல்லியில் உள்ள யசோபூமியில் இன்று தொடங்கியது. பி 20 என்று அழைக்கப்படும் இந்த மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கிவைத்தார். இந்த மாநாட்டில் ஜி20 நாடுகளைச் சேர்ந்த நாடாளுமன்ற சபாநாயகர்கள் மற்றும் சிறப்பு அழைப்பாளர்கள் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, “பி20 உச்சி மாநாடு உலகம் முழுவதும் உள்ள நாடாளுமன்ற நடைமுறைகளின் மகாகும்ப மேளாவைப் போன்று உள்ளது. இந்தியா நிலவில் தரையிறங்கி உள்ளது. அதேபோல், ஜி 20 உச்சிமாநாட்டை வெற்றிகரமாக நடத்தி உள்ளது. அதன் தொடர்ச்சியாக இன்று பி20 உச்சிமாநாடு தொடங்கப்பட்டுள்ளது.

உலகின் மிகப் பெரிய ஜனநாயகத்தைச் சேர்ந்த மக்களின் சக்திதான் இந்த மாநாட்டிற்கு மிக முக்கிய காரணம். 9வது பி20 மாநாடு இந்தியாவில் நடைபெறுவது பெருமைக்குரிய ஒன்று. இந்தியா ஜனநாயகத்தின் தாய். அதோடு, உலகின் மிகப் பெரிய ஜனநாயகம். விவாதிப்பதற்கும், கலந்துரையாடுவதற்கும் ஏற்ற இடமாக உலகம் முழுவதும் உள்ள நாடாளுமன்றங்கள் திகழ்கின்றன.

இந்தியாவில் கோயில்களில் அனுபவ மண்டபம் என்ற ஒரு ஏற்பாடு 12ம் நூற்றாண்டிலேயே இருந்தது. மக்கள் கூடி விவாதிப்பதற்காகவே இந்த மண்டபங்கள் கட்டப்பட்டன. ஜகத்குரு பசவேஸ்வரய்யா கொடுத்த கொடை இது. அத்தகைய பெருமை இந்தியாவுக்கு உள்ளது. இந்தியாவில் நாடாளுமன்ற நடைமுறை தொடர்ந்து முன்னேறிக் கொண்டிருக்கிறது. நாடு சுதந்திரம் அடைந்த பிறகு இதுவரை 17 பொதுத் தேர்தல்கள் நடந்துள்ளன. 300க்கும் மேற்பட்ட சட்டமன்றத் தேர்தல்கள் நடந்துள்ளன. உலகின் மிகப் பெரிய தேர்தலை இந்தியா நடத்துகிறது. அதுமட்டுமல்ல, ஒவ்வொரு தேர்தலின்போதும் பங்கேற்பாளர்களின் எண்ணிக்கை கூடிக்கொண்டே இருக்கிறது.

இந்தியாவில் மின்னணு வாக்குப்பதிவு நடைமுறை தொடங்கி 25 ஆண்டுகள் ஆகின்றன. இதன்மூலம் வெளிப்படையானதாகவும், திறன் நிறைந்ததாகவும் தேர்தல்கள் மாறி இருக்கின்றன. வரக்கூடிய 2024 நாடாளுமன்றத் தேர்தலின்போது 100 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க இருக்கிறார்கள். இதைப் பார்க்க நீங்கள் அனைவரும் இந்தியாவுக்கு வர வேண்டும் என்று நான் அழைப்பு விடுக்கிறேன். பயங்கரவாதம், அது எங்கு நடந்தாலும் அல்லது எந்த காரணத்திற்காக இருந்தாலும், அது மனிதகுலத்திற்கு எதிரானது. பயங்கரவாதக் குழுக்கள் மாற்றுப் பாதையில் மனித நேய அணுகுமுறையுடன் முன்னேற வேண்டும்” எனத் தெரிவித்தார்.

இந்தியாவின் ஜி20 தலைமைத்துவத்தின் பரந்த கட்டமைப்பின் கீழ் இந்த உச்சிமாநாட்டை இந்திய நாடாளுமன்றம் நடத்துகிறது. இந்தியாவின் ஜி20 தலைமைத்துவத்தின் கருப்பொருளுக்கு ஏற்ப, 9 வது பி 20 உச்சி மாநாட்டின் கருப்பொருள் “ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலத்திற்கான நாடாளுமன்றங்கள்” என்பதாகும். கடந்த மாதம் 9-10 ஆகிய தேதிகளில் புதுடெல்லியில் நடைபெற்ற ஜி 20 தலைவர்கள் உச்சிமாநாட்டில் ஆப்பிரிக்க ஒன்றியம் ஜி 20-ல் உறுப்பினரான ஆன பின் ஆப்பிரிக்க நாடுகளின் நாடாளுமன்றம் முதல் முறையாக பி20 உச்சி மாநாட்டில் பங்கேற்றுள்ளது.

இந்த பி20 உச்சிமாநாட்டின் கருப்பொருள் அமர்வுகள், பொது டிஜிட்டல் தளங்கள் மூலம் மக்களின் வாழ்க்கையில் மாற்றம்; பெண்கள் தலைமையிலான வளர்ச்சி; நிலையான வளர்ச்சி இலக்குகளை விரைவுபடுத்துதல்; நிலையான எரிசக்தி மாற்றம் ஆகிய நான்கு தலைப்புகளில் கவனம் செலுத்தும். நாடாளுமன்ற அமைப்பின் உச்சிமாநாட்டிற்குமுன் இயற்கையுடன் இணங்கிய பசுமையான மற்றும் நிலையான எதிர்காலத்தை நோக்கிய முன்முயற்சிகள் குறித்து விவாதிப்பதற்காக அக்டோபர் 12 அன்று லைஃப் (சுற்றுச்சூழலுக்கான வாழ்க்கை முறை) குறித்த உச்சி மாநாடும் நடைபெறும்.

 

 

-ht