பாகிஸ்தானை எளிதில் வீழ்த்தியது இந்திய அணி

உலகக் கோப்பை தொடரின் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி எளிதில் வெற்றி பெற்றது. ரோகித் சர்மா 6 சிக்சர்களை பறக்க விட்டு 63 பந்துகளில் 86 ரன்களை விளாசினார். ஸ்ரேயாஸும் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் சனிக்கிழமை நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட் செய்த பாகிஸ்தான் 42.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த 191 ரன்களில் சுருண்டது. 192 ரன்கள் என்ற வெற்றி இலக்கை துரத்தும் முனைப்புடன் இந்திய அணியின் ஓப்பனர்களாக ரோகித் சர்மாவும், சுப்மன் கில்லும் களமிறங்கினர்.

டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு குணமடைந்து மீண்டும் அணிக்கு திரும்பிய சுப்மன் கில் நீண்ட நேரம் நிலைக்கவில்லை. ஷஹீன் அப்ரிடி வீசிய 3வது ஓவரில் 16 ரன்களுடன் விக்கெட்டானார். தொடர்ந்து களமிறங்கிய விராட் கோலி நிலைப்பார் என நினைத்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. அவரும் 16 ரன்களில் கிளம்பினார். 10 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டை இழந்த இந்திய அணி 79 ரன்களைச் சேர்த்திருந்தது.

ரோகித் சர்மாவுடன் ஸ்ரேயாஸ் ஐயர் கைகோக்க ஆட்டம் சூடுபிடித்தது. இருவரும் இணைந்து பாகிஸ்தானின் பந்துவீச்சை பறக்க விட்டனர். அதிரடி காட்டிய இந்த இணையை பிரிக்க முடியாமல் பாகிஸ்தான் பவுலர்கள் திணறினர். மைதானம் முழுக்க ‘இந்தியா’ என கரகோஷங்கள் ஒலிக்க சிக்சர்கள் பறந்தன.

சதத்தை நோக்கி அதிரடிக காட்டிய ரோகித், ஷஹீன் அப்ரிடி வீசிய ஸ்லோ பாலை தூக்கி அடுத்தபோது அது இஃப்திகார் அகமது கைக்குள் அடைக்கலம் புகுந்தது. 6 சிக்சர்கள், 6 பவுண்டரிகள் என 63 பந்துகளில் 86 ரன்களுடன் வெளியேறினார் ரோகித். 22 ஓவர் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி 158 ரன்களைச் சேர்த்திருந்தது.

கே.எல்.ராகுல், ஸ்ரேயாஸ் ஐயர் கைகோத்தனர். விக்கெட் விழாமல் பார்த்துகொண்ட இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இறுதியில் 30ஆவது ஓவர் 3வது பந்தில் ஸ்ரேயாஸ் பவுண்டரி அடித்து தனது அரைசதத்தை எட்ட வெற்றி இலக்கும் எட்டப்பட்டது. ஸ்ரேயாஸ் ஐயர் 53 ரன்களுடனும், கே.எல்.ராகுல் 19 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். பாகிஸ்தான் அணி தரப்பில், ஷஹீன் அப்ரிடி 2 விக்கெட்டுகளையும், ஹஸன் அலி 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.

பாகிஸ்தான் இன்னிங்ஸ்: பாகிஸ்தானின் ஓப்பனர்களாக அப்துல்லா ஷபிக், இமாம்-உல்-ஹக் களமிறங்கினர். பொறுமையாக ஆட்டத்தை தொடங்கியவர்கள், 7-ஆவது ஓவரில் ஆளுக்கு 18 ரன்களைச் சேர்த்த நிலையில் அணியின் ஸ்கோர் 37 ஆக இருந்தது. 8-ஆவது ஓவரில் இந்த பார்ட்னர்ஷிப் உடைக்கப்பட்டது. முஹம்மது சிராஜ் வீசிய பந்தில் முஹம்மது ஷபிக் எல்பிடபள்யூ முறையில் அவுட்டாகி 20 ரன்களில் வெளியேறினார். அடுத்து களத்துக்கு வந்தார் கேப்டன் பாபர் அஸம்.

10 ஓவர்கள் முடிவில் 1 விக்கெட்டை இழந்த பாகிஸ்தான் 49 ரன்களைச் சேர்ந்திருந்தது. இந்த ஆண்டில் பாகிஸ்தான் விளையாடிய 18 ஒருநாள் போட்டிகளில் பவர் ப்ளேயில் அந்த அணி சார்பில் யாரும் சிக்சர்கள் விளாசவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 6 ஃபோர்களை விளாசி 36 ரன்களுடன் களமாடிக்கொண்டிருந்த இமாம்-உல்-ஹக்கின் விக்கெட்டை 13-ஆவது ஓவரில் ஹர்திக் பாண்டியா கைப்பற்றியது இந்திய ரசிகர்களுக்கு ஆறுதல். அவரைத் தொடர்ந்து பாபர் அஸம் – முகமது ரிஸ்வான் பாட்னர் ஷிப் அமைத்து நிதான ஆட்டத்துடன் அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.

57 பந்துகளில் அரைசதம் கடந்த பாபர் அஸமை 29-ஆவது ஓவரில் சிராஜ் போல்டாக்கினார். அவ்வளவு தான். அடுத்தடுத்து பாகிஸ்தான் தனது வேகத்தை இழக்கத் தொடங்கியது. சவுத் ஷகீல் 6 ரன்கள், இப்திகார் அகமது 4 என 33-ஆவது ஓவரில் மட்டும் 2 விக்கெட்டுகளை பறிகொடுத்து பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டது பாகிஸ்தான். ரிஸ்வான் நம்பிக்கையளிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அடுத்த ஓவரிலேயே பும்ரா பந்தில் போல்டானார்.

ஷதாப் கான் 2, முஹம்மது நவாஸ் 4, ஹசன் அலி 12 என அடுத்தடுத்து களமிறங்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க 41 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்த பாகிஸ்தான் 189 ரன்களைச் சேர்த்திருந்தது. ஹரிஸ் ரவூஃப்,ஷஹீன் அப்ரிடி இறுதிக்கட்டத்தில் போராடி வந்த நிலையில், ஹரிஸ் ரவூஃப் 2 ரன்களில் அவுட்டாக 191 ரன்களில் பாகிஸ்தான் சுருண்டது. இந்திய அணி தரப்பில் சிராஜ், பும்ரா, ஹர்திக் பாண்டியா, குல்தீப் யாதவ், ஜடேஜா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

உலக கோப்பை தொடர் போட்டிகளில் 8ஆவது முறையாக பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா வெற்றிபெற்றுள்ளது. இந்த வெற்றி வரலாறு தொடர்ந்து கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

 

 

-ht