தன்பாலின ஈர்ப்பாளர்கள் திருமணத்துக்கு சட்ட அங்கீகாரம் வழங்குவதை நாடாளுமன்றம், சட்டமன்றங்களே முடிவு செய்யும் என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தெரிவித்துள்ளார்.
தன்பாலின ஈர்ப்பாளர்கள் திருமணத்துக்கு சட்ட அங்கீகாரம் கோரும் வழக்கில், தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதிகள் சஞ்சய் கிஷன் கவுல், எஸ்.ரவீந்திர பட், ஹீமா கோலி, பிஎஸ் நரசிம்மா ஆகியோர் அடங்கிய அமர்வு 4 வெவ்வேறு தீர்ப்புகளை வழங்கியுள்ளது. தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் முதலில் தீர்ப்பை வாசித்தார். அதில் அவர், “உச்ச நீதிமன்றத்தால் சிறப்புத் திருமணச் சட்டத்தை ரத்து செய்ய முடியாது. அதில் தன்பாலின ஈர்ப்பாளர்கள் திருமணத்தை அங்கீகரிக்கும் ஷரத்தை சேர்க்கவும் முடியாது. திருமணங்கள் தொடர்பான சட்டங்களை நாடாளுமன்றமும், சட்டமன்றங்களும்தான் இயற்ற முடியும்.
அதேவேளையில், திருமண பந்தம் என்பது நிலையானது அல்ல. தன்பாலின ஈர்ப்பாளர்கள் திருமண பந்தத்தில் இணைய உரிமையும், சுதந்திரமும் உள்ளது. அதுபோன்ற இணையேற்புகளை அங்கீகாரிக்க முடியாமல் போவது அச்சமூகத்தினர் மீது தாக்கத்தை ஏற்படுத்தும். அவர்களால் இப்போதுள்ள சட்டத்தின்படி திருமணத்துக்கு அங்கீகாரம் பெற்றுக்கொள்ள இயலாது என்பதால் நாடாளுமன்றமும், சட்டமன்றங்களுமே தன்பாலின ஈர்ப்பாளர்கள் திருமணத்தை சட்டபூர்வமாக அங்கீகரிப்பதா இல்லையா என்பதை முடிவு செய்ய வேண்டும். தன்பாலின ஈர்ப்பாளர்களின் உறவு, அரசால் அசட்டை செய்யப்படவோ அல்லது பாகுபாட்டுக்கு உள்ளாக்கப்படுவதோ கூடாது” என்றார்.
நீதிபதி பட் தனது தீர்ப்பில் கூறுகையில், “திருமண பந்தங்களை சட்டங்கள்தான் அங்கீகரிக்கும். இந்த நீதிமன்றம் அதற்கான சட்டங்களை இயற்றும்படி அரசை வலியுறுத்த மட்டுமே முடியும்” என்றார். மேலும், “இணையேற்புகள் சட்ட அங்கீகாரம் இல்லாமல் உயிர்ப்புடன் இருக்க இயலாது. ஓர் அமைப்பை உருவாக்குவது என்பது அரசின் கையில்தான் இருக்கிறது. அத்தகைய அமைப்பை உருவாக்க நீதிமன்றம் வாயிலாக வலியுறுத்தலாம்” என்று நீதிபதி பட் தனது தீர்ப்பில் குறிப்பிட்டார்.
தொடர்ந்து நீதிபதி கவுல் அளித்த தீர்ப்பில், “தன்பாலின ஈர்ப்பாளர்களின் திருமணத்தை அங்கீகரிப்பதன் மூலம் திருமண சமத்துவத்தில் அடுத்த அடியை எடுத்துவைக்கலாம்” என்று குறிப்பிட்டார்.
5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வில் ஈடுபட்டிருந்த பெண் நீதிபதி ஹீமா கோலி தீர்ப்பேதும் வழங்கவில்லை. இந்த வழக்கில் 5-ல் நான்கு நீதிபதிகள் தீர்ப்பு வழங்கியுள்ளனர். அதில், 3 நீதிபதிகள் தன்பாலின திருமணத்தை சட்டபூர்வ அங்கீகரிப்பது நாடாளுமன்றம், சட்டமன்றங்களால் மட்டுமே முடியும் என்ற நிலைப்பாட்டினை எடுத்துள்ளனர்.
-ht