சிவகாசி அருகே வெவ்வேறு இடங்களில் உள்ள இரு பட்டாசு ஆலைகளில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 10 பேர் உயிரிழந்தனர். மீட்புப் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
சிவகாசி அருகே கங்காகுளத்தை சேர்ந்த ராமசாமி மகன் கணேச மூர்த்தி (43). இவர் எம்.புதுப்பட்டி காவல் நிலையத்துக்கு உட்பட ரெங்கபாளையம் கம்மாபட்டி பகுதியில் கனிஷ்கர் பயர் ஒர்க்ஸ் என்ற பெயரில் பட்டாசு ஆலையும் அதனுடன் பட்டாசு விற்பனை கடையும் நடத்தி வருகிறார். இந்த ஆலையில் 50-க்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வந்தனர். பட்டாசு ஆலையில் பணிபுரிந்த சுமார் 15 தொழிலாளர்கள் பட்டாசு கடையில் அமர்ந்து மதிய உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். இந்த ஆலையில் இன்று மதியம் உணவு இடைவேலையின்போது, உற்பத்தி செய்யப்பட்ட பட்டாசுகளை வெடித்து சோதனை செய்து பார்த்து உள்ளனர். அப்போது அருகே இருந்த பட்டாசு விற்பனை கடையில் தீப்பொறி பட்டு வெடி விபத்து ஏற்பட்டது. இதில் பட்டாசு கடையில் மதிய உணவு சாப்பிட்டு கொண்டு இருந்த 9 பேர் உடல் கருகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இறந்தவர் விவரம்: வடக்கு அழகாபுரியைச் சேர்ந்த சீனிராஜ் மனைவி மகாதேவி (50), நாகராஜ் மனைவி பஞ்சவர்ணம் (35), முத்துராஜ் மகன் பாலமுருகன் (30), தாளமுத்து மனைவி தமிழ்ச்செல்வி (55), எஸ்.அம்மாபட்டியை சேர்ந்த முத்துராஜ் மகள் முனீஸ்வரி (32), அழகாபுரியைச் சேர்ந்த மகேந்திரன் மகன் தங்கமலை (33), முனியப்பன் மனைவி அனிதா (45), லட்சுமியாபுரத்தைச் சேர்ந்த ஜெயமுருகன் மனைவி பாக்கியம் (35), சுப்புக்கனி மனைவி குருவம்மாள் (55) ஆகிய 9 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தனர்.
அந்த அறையில் முழுவதும் தீ அணைக்கப்படாததால், மேலும் தொழிலாளர்கள் உள்ளே சிக்கி இருக்கலாம் என அஞ்சப்படுகிறது. சிவகாசி, விருதுநகர், ஸ்ரீவில்லிபுத்தூரைச் சேர்ந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
கீச்சநாயக்கன்பட்டி விபத்து: அதேபோல், சிவகாசிக்கு அருகே மாரனேரி கீச்சநாயக்கன்பட்டியில் உள்ள முத்து விஜயன் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலையில் சக்கரம் ரக பட்டாசு உற்பத்திக்காக மருந்து கலவை செய்தபோது ஏற்பட்ட வெடி விபத்தில் வேம்பு (60) என்பவர் உடல் கருகி உயிரிழந்தார்.
-ht