குஜராத்தில் முஸ்லிம் இளைஞர்களை தாக்கிய 4 போலீஸாருக்கு 14 நாள் சிறை தண்டனை

குஜராத் மாநிலத்தில் பொதுவெளியில் மூன்று முஸ்லிம் இளைஞர்களை கட்டிவைத்து அடித்த நான்கு போலீஸாருக்கு 14 நாட்கள் சிறை தண்டனையும், ரூ.2,000 அபராதமும் விதித்து குஜராத் உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

முஸ்லிம் இளைஞர்களை பொதுவெளியில் கட்டிவைத்து அடித்த சம்பவம் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் குஜராத் மாநிலம் கேடா மாவட்டத்தில் உள்ள உந்தேலா கிராமத்தில் நடந்தது. அந்தப் பகுதியில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கற்களை வீசியதாக சொல்லி சில இஸ்லாமிய இளைஞர்களை போலீஸார் மின்சார கம்பத்தில் கட்டி வைத்து, லத்தியைக் கொண்டு பிரம்படி கொடுத்துள்ளனர். இச்சம்பவம் குறித்த வீடியோ சமூக வலைதளத்தில் பரவி இருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த வழக்கினை விசாரித்த நீதிபதிகள் ஏ.எஸ். சுபெஸியா மற்றும் கீதா கோபி அடங்கிய அமர்வு, ‘காவல் துறையினரை சிறிய அளவிலான சிறை தண்டனைக்கு உட்படுத்தும் உத்தரவை வழங்கும் இந்த நாள் வந்ததில் இந்த நீதிமன்றம் வருத்தமடைகிறது. தண்டனையுடன் காவலர்களுக்கு தலா ரூ.2,000 அபராதமும் விதிக்கப்படுகிறது. அதனைக் கட்டத் தவறும் பட்சத்தில் கூடுதலாக மூன்று நாட்கள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும்’ என்று தெரிவித்தது.

மேலும், தங்களுக்கு வழங்கப்பட்ட சிறை தண்டனையை எதிர்த்து, ஆய்வாளர் ஏ.வி.பார்மர், உதவி ஆய்வளர் டிபி குமவத், தலைமைக் காவலர் கே.எல்.தாபி மற்றும் காவலர் ராஜூ தாபி ஆகியோரின் மனுவினை நீதிபதிகள் நிகாரித்தனர்.

முன்னதாக, ஒருவரை லத்தியைக் கொண்டு அடிப்பது சித்திரவதையாகாது என்றும், குற்றவாளி என்ற தீர்ப்புடன் வழங்கப்படும் தண்டனையா தங்களது வேலை மிகவும் பாதிக்கும் என்றும், தாங்கள் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்பதாகவும் அக்டோபர் 11-ம் தேதி நீதிமன்றத்தில் காவலர்கள் தெரிவித்தனர்.

குற்றம்சாட்டப்பட்ட நான்கு காவலர்கள் சார்பாக அக்டோபர் 16-ம் தேதி நீதிமன்றத்தில் அமர்வு முன்பு ஆஜரான மூத்த வழக்கறிஞர் பிகாஷ் ஜெயின், தனது மனுதாரர்கள் பாதிக்கப்பட்ட மூன்று முஸ்லிம் இளைஞர்கள் மற்றும் அவர்களது வழக்கறிஞர்களைச் சந்தித்தாகவும், அவர்கள் எந்த சமாதானத்துக்கும், இழப்பீடுகளை ஏற்றுக்கொள்ள தயாராக இல்லை என்றும் தெரிவித்தார்.

காவல் துறை கண்காணிப்பாளர் ராஜேஷ் குமார் காதியா கடந்த ஆண்டு நீதிமன்றத்தில் கூறுகையில், ‘இந்து சமூகத்தை அச்சுறுத்தும் வகையில் கார்பா நிகழ்வில் கலவரத்தை தூண்டும் வகையில் அந்த மூவரும் செயல்பட்டதாக கூறப்படுகிறது. அமைதியை நிலைநாட்டுவதற்காக நான்கு காவலர்களும் வன்முறையை கையில் கையிலெடுக்க வேண்டியதாகிவிட்டது’ என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

 

-ht