மக்களை ஏமாற்றி பணத்தை கொள்ளை அடிக்கிறது அதானி குழுமம்: ராகுல் காந்தி

டெல்லியில் உள்ள அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்தில் நேற்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி செய்தியாளர்களை சந்தித்து கூறியதாவது:

அதானி குழுமம் சந்தை மதிப்பை விட அதிகமாக கொடுத்து பல நூறு கோடி டாலர்களுக்கு நிலக்கரியை இறக்குமதி செய்துள்ளதை பைனான்ஸியல் டைம்ஸ் தெளிவாக சுட்டிக்காட்டியுள்ளது. இவ்வாறு அதிக விலை கொடுத்து நிலக்கரியை வாங்கியதன் மூலம் மக்களின் பாக்கெட்டுகளில் இருந்து அதானி குழுமம் ரூ.12,000 கோடியை சுருட்டியுள்ளது.

இந்தோனேசியாவில் இருந்து நிலக்கரியை அதானி வாங்கியுள்ளார். இந்தியாவுக்கு வந்ததும் அதன் விலை இரட்டிப்பாகியுள்ளது. நிலக்கரி விலை அதிகமானதால் அது சாமானிய மக்களின் மின் கட்டணத்தில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால், நுகர்வோர் அதிக மின் கட்டணத்தை செலுத்த வேண்டிய நெருக்கடிக்கு ஆளாகி வருகின்றனர்.

இதுபோன்ற ஒரு சம்பவம் உலகின் வேறுநாடுகளில் நடைபெற்றிருந்தால் அந்த அரசு கவிழ்ந்திருக்கும். ஆனால், துரதிருஷ்டவசமாக இந்தியாவில் எந்தவொரு நடவடிக்கையும் இந்த விவகாரம் தொடர்பாக எடுக்கப்படவில்லை.

அதானி யாருடைய பாதுகாப்பில் உள்ளார் என்பது நாட்டு மக்களுக்கு நன்றாக தெரியும். அவரை பாதுகாக்கும் அதிகாரம் யாரிடம் உள்ளது என்பதை நாம் அனைவரும் நன்கு அறிவோம்.

இந்த விவகாரத்தில் பிரதமர் மவுனம் சாதிப்பது ஏன்? பிரதமருக்கு நான் உதவி மட்டுமே செய்கிறேன். விசாரணையை உடனடியாக தொடங்கி பிரதமர் தனது நம்பகத்தன்மையை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்று விரும்புகிறேன். இவ்வாறு ராகுல் காந்தி தெரிவித்தார்.

அதானி குழுமத்தில் முறைகேடுகள் நடைபெற்றதாக அமெரிக்காவை சேர்ந்த ஹிண்டன்பர்க் ஆய்வு நிறுவனம் குற்றச்சாட்டு தெரிவித்தது. இதையடுத்து, அதானியின் நிதி பரிவர்த்தனைகள் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என மத்திய அரசிடம் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

 

 

-ht