இந்தியாவில் பணியாற்றி வந்த 41 தூதரக அதிகாரிகளை திரும்பப் பெற்றது கனடா

காலிஸ்தான் குழு தலைவர் கொல்லப்பட்ட விவகாரத்தில் இந்தியாவுக்கும் கனடாவுக்கும் இடையில் சர்ச்சை நீடிக்கும் நிலையில், இந்தியாவில் பணியாற்றி வந்த 41 தூதரக அதிகாரிகளை கனடா திரும்பப் பெற்றுவிட்டது. இந்தியா விதித்த கெடு முடிவடைந்த நிலையில், இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இது குறித்து கனடாவின் வெளியுறவுத் துறை அமைச்சர் மெலனி ஜோலி கூறுகையில், “தங்கள் நாட்டில் உள்ள எங்களின் தூதரக அதிகாரிகளை வெளியேற்ற வேண்டும் என்றும், அவ்வாறு வெளியேற்றப்படாத அதிகாரிகளின் பொறுப்புகள் நீக்கப்படும் என்றும் ஒருதலைபட்சமாக இந்தியா கூறியிருந்தது. இந்த முடிவு உரிய காரணம் இல்லாதது, முன்னெப்போதும் நிகழ்ந்திராதது, தூதரக அதிகார உறவுகள் குறித்த வியன்னா மாநாட்டு ஒப்பந்தத்தை மீறிய செயலாகும். தூதரக அதிகார விவகாரங்களின் விதிகளை உடைக்க நாம் அனுமதித்தால், இந்த கிரகத்தில் எந்த ஓர் இடத்திலும் எந்த தூதரக அதிகாரியும் பாதுகாப்பாக இருக்க முடியாது. இந்த காரணத்துக்காக நாங்கள் இந்தியாவுக்கு எந்த பதிலடியும் கொடுக்கப் போவதில்லை” என்று தெரிவித்துள்ளார். இந்தியாவில் கடனாவின் 41 தூதரக அதிகாரிகளும், 42 உதவியாளர்களும் பணியாற்றி வந்த நிலையில், அவர்கள் அனைவருமே திரும்ப பெறப்பட்டுள்ளனர்.

பின்புலம் என்ன? – பஞ்சாப் மாநிலத்தில் கடந்த 1980-1990 காலகட்டத்தில் பல்வேறு பிரிவினைவாத அமைப்புகள் தலைதூக்கின. காலிஸ்தான் பெயரில் தனி நாடு கோரி அந்த அமைப்புகள் தேசவிரோத செயல்களில் ஈடுபட்டன. மத்திய, மாநில அரசுகளின் தீவிர நடவடிக்கைகளால் பிரிவினைவாத அமைப்புகள் ஒடுக்கப்பட்டன. இதனால், அந்த அமைப்புகளை சேர்ந்த பலரும் கனடாவுக்கு தப்பினர். அவர்களுக்கு அந்நாட்டு அரசு குடியுரிமை வழங்கியது.

இந்தச் சூழலில், பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ உளவு அமைப்பின் தூண்டுதலால் கனடாவை சேர்ந்த சில சீக்கியர்கள் சமீபகாலமாக மீண்டும் காலிஸ்தான் கோரிக்கையை எழுப்பிவருகின்றனர். காலிஸ்தான் பிரிவினைவாதிகளுக்கு ஐஎஸ்ஐ அமைப்பும் தாராளமாக நிதியுதவி, ஆயுதங்களை வழங்கி வருகிறது.

அந்த வகையில், இந்தியாவில் இருந்து கனடாவில் குடியேறிய ஹர்தீப் சிங் நிஜார் என்பவர், ‘காலிஸ்தான் டைகர் ஃபோர்ஸ்’ (கேடிஎஃப்) என்ற அமைப்பின் தலைவராக இருந்து, இந்தியாவுக்கு எதிரான செயல்களில் ஈடுபட்டு வந்தார். அவரை தேடப்படும் தீவிரவாதியாக இந்திய அரசு கடந்த 2022-ல்அறிவித்தது. அவரை இந்தியாவிடம் ஒப்படைக்குமாறு பலமுறை வலியுறுத்தியும், கனடா அரசு ஏற்கவில்லை.

இந்த நிலையில், கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணம், சர்ரே நகரில் உள்ள குருத்வாரா வளாகத்தில் மர்ம நபர்களால் ஹர்தீப் சிங் நிஜார் கடந்த ஜூன் 18-ம் தேதி சுட்டுக் கொல்லப்பட்டார். இதன் பின்னணியில் இந்திய அரசு இருப்பதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம்சாட்டினார். இதை இந்தியா திட்டவட்டமாக மறுத்தது.

இந்த விவகாரத்தால் இரு நாடுகள் இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. நிஜார் கொலையில் தொடர்பு இருப்பதாக கனடாவில் பணியாற்றிய இந்திய தூதரக அதிகாரி ஒருவர் உடனடியாக வெளியேற்றப்பட்டார். இதற்கு பதிலடியாக, இந்தியாவில் பணியாற்றிய கனடா தூதரக மூத்த அதிகாரி அந்நாட்டுக்கு திருப்பி அனுப்பப்பட்டார்.

இதன் தொடர்ச்சியாக, இந்தியாவில் பணியாற்றும் 41 கனடா தூதரக அதிகாரிகளை திரும்ப பெறுமாறு அந்நாட்டு அரசிடம் இந்திய அரசு வலியுறுத்தி உள்ளது. அக்.10-ம் தேதிக்குள் அவர்கள் வெளியேற வேண்டும். அதன்பிறகு அவர்களது தூதரக பாதுகாப்பு உரிமை பறிக்கப்படும் என்று மத்திய அரசு சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

 

 

-ht