தேசிய மக்கள்தொகை கணக்கெடுப்புடன் சாதிவாரி கணக்கெடுப்பை இணைத்து நடத்த வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இதுதொடர்பாக நேற்று அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:
இந்தியாவில் சமூக நீதி மற்றும் சமத்துவத்தை நிலைநாட்டிட, சமமான மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியை உறுதி செய்திட, தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்புடன் சாதிவாரியான கணக்கெடுப்பை இணைத்து நடத்திட வேண்டும்.
இந்தியாவில் சமூக நீதியை நிலைநாட்டி, வளர்ச்சியின் பலன்களை மிகவும் பாதிக்கப்படக்கூடிய பிரிவினருக்குக் கொண்டு செல்வதற்கும், வலிமையான, அனைவரையும் உள்ளடக்கிய இந்தியாவை உருவாக்குவதற்கும் ஏதுவாக, தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்புடன், விரிவானதொரு சாதிவாரிக் கணக்கெடுப்பை இணைத்து நடத்துவதற்கான ஏற்பாடுகளை மத்திய அரசு உடனடியாக தொடங்கிட வேண்டும். 2021-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு நடைபெறாத நிலையில், வரவிருக்கக்கூடிய தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பில், சாதிவாரியான கணக்கெடுப்பை இணைத்து நடத்திட வேண்டும்.
மாநில அளவில் இதற்கான நல்ல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு இருந்தாலும், இந்தியாவின் சட்டப்பூர்வ மக்கள்தொகை கணக்கெடுப்பு, முக்கியமான சாதி தொடர்பான தரவு உள்ளீடுகளுடன் மேற்கொள்ளப்பட்டால் மட்டுமே, சமூக நீதி, சமத்துவம் போன்றவற்றை நிலைநாட்டிட இயலும். சமமான மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியை உறுதி செய்திட இயலும்.
90 ஆண்டுகளில் பல மாற்றங்கள்: கடந்த 1931-ம் ஆண்டு இந்தியாவில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. கடந்த 90 ஆண்டுகளில் நம் நாட்டின் மக்கள்தொகை மற்றும் சமூக பொருளாதார நிலப்பரப்பு பல மாற்றம் அடைந்துள்ளது. ஆனால், பின்தங்கிய பிரிவினர் பின்தங்கிய நிலையிலேயே உள்ளனர்.
பிஹார் போன்ற சில மாநில அரசுகள் சாதி அடிப்படையிலான கணக்கெடுப்பை வெற்றிகரமாக நடத்தியுள்ளன. மேலும், சில மாநிலங்கள் அந்த நடவடிக்கைகளை அறிவித்துள்ளனர். இந்த மாநிலங்களின் குறிப்பிட்ட முன்முயற்சிகள் மற்றும் அதன் தரவுகளின் முடிவுகள் சமூகம் மற்றும் அதன் தேவைகளை பற்றிய நுண்ணறிவுகளை வழங்குவதில் பயனுள்ளதாக இருந்தாலும், உள்ளீடுகள் மற்றும் செய்முறைகளின் நாடு தழுவிய ஒப்பீட்டின் நன்மை அவற்றுக்கு இல்லை.
சட்டப்பூர்வமான கணக்கெடுப்பு: எனவே, முக்கியமான சாதி தொடர்பான உள்ளீடுகளுடன் கூடிய இந்திய சட்டப்பூர்வமான மக்கள்தொகை கணக்கெடுப்பு மட்டுமே சமூக நீதியை நிலைநிறுத்துவதற்கான பொருத்தமான தளத்தை வழங்க முடியும்.
தேசிய மக்கள்தொகை கணக்கெடுப்புடன் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை ஒருங்கிணைப்பதன் மூலம் மட்டுமே நமது சமூகத்தின் சாதிய அமைப்பு மற்றும் சமூக பொருளாதாரம் பற்றிய விரிவான, நம்பகமான தரவுகளை வழங்க முடியும்.
அதனால், தேசிய மக்கள்தொகை கணக்கெடுப்புடன் சாதிவாரியான மக்கள்தொகை கணக்கெடுப்பை இணைத்து நடத்த வேண்டும். இது வலிமையான இந்தியாவை உருவாக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்புடன் சாதிவாரி கணக்கெடுப்பையும் இணைத்து நடத்த வேண்டும் என்ற தனது கோரிக்கை மீது உங்கள் தனிப்பட்ட தலையீடை எதிர்பார்க்கிறேன்.
இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-ht