சத்தீஸ்கர் பள்ளி, கல்லூரிகளில் இலவசக் கல்வி: ராகுல் காந்தி தேர்தல் வாக்குறுதி

சத்தீஸ்கரில் காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் பள்ளி, கல்லூரிகளில் இலவசக் கல்வித் திட்டம் கொண்டு வரப்படும் என்றுகாங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி தெரிவித்தார்.

சத்தீஸ்கர் சட்டப்பேரவைக்கு வரும் நவ. 7, 17-ம் தேதிகளில் 2 கட்டமாக தேர்தல் நடைபெறவுள்ளது. இதையொட்டி ராகுல் காந்தி நேற்று கான்கெர் மாவட்டத்தில் பானுபிரதாப்பூர் பேரவைத் தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் செய்தார். அங்கு நடந்த பொதுக் கூட்டத்தில் அவர் பேசியதாவது:

பிற்படுத்தப்பட்ட மக்கள் குறித்தசாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று நான் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன்.ஆனால், பிரதமர் மோடி அதுகுறித்து பேசுவதை தவிர்த்து வருகிறார். நாங்கள் ஆட்சியில் இருந்தபோது இது தொடர்பாக தயாரிக்கப்பட்ட புள்ளி விவரங்களை பிரதமர் மோடி தலைமையிலான அரசு வெளியிடாமல் உள்ளது. இதனால், பிற்படுத்தப்பட்ட மக்கள் தங்களின் எண்ணிக்கைக்கு ஏற்ற இட ஒதுக்கீட்டைப் பெறாமல் உள்ளனர். புள்ளி விவரத்தை வெளியிட்டால் அது குறித்த உண்மை பிற்படுத்தப்பட்ட சமூகத் தைச் சேர்ந்த இளைஞர்களுக்கு தெரிந்துவிடும் என்பதால்தான் மோடி அரசு அதனை வெளியிடா மல் உள்ளது.

மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், சாதிவாரி கணக்கெடுப்புப் பணி 2 மணி நேரத்தில் தொடங்கும். எவ்வளவு வேகமாக அதனை நடத்தி முடிக்க முடியுமோ அந்த அளவுக்கு வேகமாக நடத்தி முடிப்போம் என்பதை உறுதியாகத் தெரிவிக்கிறேன். தற்போது மத்தியில் உள்ள அரசு எதை செய்ய மறுக்கிறதோ நாங்கள் அதனை செய்வோம். சத்தீஸ்கரில் காங்கிரஸ் கட்சி மீண்டும் ஆட்சிக்கு வந்தால், மாநில அரசு சாதிவாரி கணக்கெடுப்பைத் தொடங்கும். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் 26 லட்சம் விவசாயிகளின் ரூ.23 லட்சம் கோடி கடனை நாங்கள் தள்ளுபடி செய்வோம். தொழிலாளர்கள் ஒவ்வொருவருக்கும் ரூ.7 ஆயிரம் வழங்குவோம்.

பள்ளி, கல்லூரிகளில் இலவசக்கல்வித் திட்டத்தைக் கொண்டு வருவோம். எல்கேஜி முதல் உயர்கல்வி வரை (பட்டமேற்படிப்பு) இலவசக் கல்வித் திட்டத்தைக் கொண்டு வருவோம். அனைத்து அரசு கல்லூரிகள், அரசு உதவி பெறும் கல்லூரிகளில் இந்தத் திட்டத்தைக் கொண்டு வருவோம். படிப்புக்காக மாணவர்கள் ஒரு பைசா செலவு செய்ய வேண்டாம். இவ்வாறு அவர் பேசினார்.

 

 

-ht