ஆந்திராவில் நின்று கொண்டிருந்த பயணிகள் ரயில் மீது பலாசா எக்ஸ்பிரஸ் ரயில் மோதி விபத்து

ஆந்திர மாநிலம் விஜயநகரம் மாவட்டம் கண்டகப்பள்ளியில் பயணிகள் ரயில் மீது எக்ஸ்பிரஸ் ரயில் மோதிய விபத்தில் சுமார் 6 பேர் உயிரிழந்துள்ளனர். 15-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக தகவல். விபத்து நிகழ்ந்த இடத்தில் மீட்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

விசாகப்பட்டினத்தில் இருந்து ராயகடா சென்ற பயணிகள் ரயில் (வண்டி எண் 08504) மீது விசாகப்பட்டினத்தில் இருந்து பலாசா சென்ற ரயில் (வண்டி எண் 08532) மோதிய காரணத்தால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் மூன்று ரயில் பெட்டிகள் தடம்புரண்டது. கேபிள் பழுது காரணமாக நின்று கொண்டிருந்த பயணிகள் ரயில் மீது எக்ஸ்பிரஸ் ரயில் பின்புறமாக மோதி உள்ளது. ஞாயிற்றுக்கிழமை மாலை 7 மணியளவில் இந்த விபத்து நடைபெற்றது.

விபத்து நடைபெற்ற இடத்தில் மீட்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விஜயநகர மாவட்ட நிர்வாகம், தேசிய மீட்பு படையினர் மற்றும் ரயில்வே ஊழியர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், காயமடைந்தவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் அருகாமையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வருவதாக விஜயநகரம் மாவட்ட ஆட்சியர் எஸ்.நாகலட்சுமி தெரிவித்துள்ளார். இருப்பினும் விபத்து நடைபெற்றுள் இடம் இருள் சூழ்ந்துள்ள காரணத்தால் மீட்பு பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளதாகவும் தகவல்.

-ht