இந்தியாவின் யுபிஐ பரிவர்த்தனையை நடைமுறைப்படுத்த மலேசியா நடவடிக்கை

இந்தியாவின் யுபிஐ மற்றும் ரூபே பரிவர்த்தனை சேவையை ஏற்றுக் கொள்ளும் வகையில் தங்கள் பரிவர்த்தனை கட்டமைப்பில் மாற்றம் செய்யும் நடவடிக்கையில் மலேசியா அரசு இறங்கியுள்ளது. மேலும், இருநாடுகளுக்கிடையிலான வர்த்தகத்தை மேம்படுத்த, உள்நாட்டு கரன்சியில் பரிவர்த்தனை மேற்கொள்வதற்கான வாய்ப்புகளையும் மலேசியா பரிசீலித்து வருகிறது.

இது தொடர்பாக மலேசிய வெளியுறவுத் துறை அமைச்சர் சாம்ப்ரிஅப்துல் காதிர் கூறுகையில், “மலேசிய மத்திய வங்கி இந்தியாவின் யுபிஐ பரிவர்த்தனையை நடைமுறைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது. இது முக்கியமான முன்னகர்வு. ரூபே பரிவர்த்தனையும் மலேசியா ஏற்றுக்கொள்ள இருக்கிறது. இந்தப் பரிவர்த்தனைகளை ஏற்றுக்கொள்வதற்கு தொழில்நுட்பக் கட்டமைப்பில் சில மாற்றங்கள் செய்யப்பட வேண்டும். அந்தப்பணிகள் தற்போது நடைபெற்றுவருகின்றன. அதேபோல், இந்தியாவுடன் உள்நாட்டு கரன்சியிலேயே ஏற்றுமதி – இறக்குமதி பரிவர்த்தனை மேற்கொள்ளும் முயற்சியில் இறங்கியுள்ளோம். இதனால், இந்தியா – மலேசியா இடையிலான வர்த்தகம் மேம்படும்” என்று தெரிவித்துள்ளார்.

மத்திய அரசு 2016-ம் ஆண்டு யுபிஐ கட்டமைப்பை நடைமுறைப்படுத்தியது. தற்போது பெரிய வணிக வளாகங்கள் முதல் சிறிய பெட்டிக்கடைகள் வரையில் யுபிஐ பரிவர்த்தனை பிரதானமாக மாறியுள்ளது. இந்நிலையில், வெளிநாடுகளுக்கும் யுபிஐ மூலம் பணப்பரிவர்த்தனை செய்வதற்கான கட்டமைப்பை உருவாக்கும் முயற்சியில் மத்திய அரசு இறங்கியுள்ளது. அதேபோல், வெளிநாடுகளுடனான வர்த்தகத்தில் டாலருக்குப் பதிலாக ரூபாயைப் பயன்படுத்தும் முயற்சியை மத்திய அரசு மேற்கொண்டுவருகிறது.

 

 

-th