டெல்லியின் அண்டை மாநிலங்களில் பயிர்க் கழிவுகள் எரிப்பதை நிறுத்த வேண்டும்

பஞ்சாப் உள்ளிட்ட டெல்லியின் அண்டை மாநிலங்களில் பயிர்க் கழிவுகளை எரிப்பதை நிறுத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும், டெல்லியில் நிலவும் காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்த தீர்வுகள் எட்டப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது.

டெல்லியில் காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்துவது தொடர்பான வழக்கு நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் தலைமையிலான நீதிபதிகள் சுதான்ஷு துலியா, அசாதுதீன் அமனுல்லா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, சஞ்சய் கிஷன், “காற்று மாசுபாடு பிரச்சினை தொடர்பாக நிறைய அறிக்கைகள் வெளி வருகின்றன. நிறைய நிபுணர் குழுக்கள் அமைக்கப்பட்டுவிட்டன. ஆனால், களத்தில் ஏதும் நடந்த மாதிரி இல்லை. நாங்கள் நடவடிக்கைகளைக் கண்கூடாக காண விரும்புகிறோம்” என்றார். அப்போது அரசுத் தரப்பில் பயிர்க் கழிவுகளை எரிப்பதைத் தடுக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன என்று தெரிவிக்கப்பட்டது. இருப்பினும் நீதிபதிகள் மாநில அரசை கடுமையாக விமர்சித்தனர்.

கடவுளுக்கு கேட்டுவிட்டது, தொடர்ந்து பேசிய நீதிபதிகள், ”எங்களுக்கு பயிர்க் கழிவுகள் எரிப்பது நிறுத்தப்பட வேண்டும். காற்றின் தரக் குறியீடு மேம்பட வேண்டும். அது எப்படி நடத்தப்படுகிறது என்பது உங்களுடைய (மத்திய, மாநில அரசுகளின்) பிரச்சினை. ஆனால் தீபாவளி விடுமுறையில் காற்று மாசுபாடு குறைந்தே ஆக வேண்டும். பயிர்க் கழிவு எரிப்பைத் தடுக்க அவசர கால நடவடிக்கைகளை மேற்கொள்ளுங்கள். நேற்றிரவு மழை பெய்ததால் காற்றின் தரம் சற்றே மேம்பட்டுள்ளது. மக்களின் பிரார்த்தனைக்கு கடவுள் செவி கொடுத்துள்ளார்” என்றனர்.

தலைநகர் டெல்லியில் நேற்றிரவு ஆங்காங்கே மழை பெய்ததால் அங்கு காற்று மாசுபாட்டின் அளவு சற்றே குறைந்துள்ளது. இதனால் இன்று காலை 7 மணியளவில் டெல்லியில் காற்றின் தரக் குறையீடு 408 என்ற அளவில் இருந்தது. நேற்று மாலை இதுவே 437 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது. காற்றின் தரக் குறியீடு 0 – 50 வரையில் இருந்தால், காற்றின் தரம் நன்றாக இருப்பதாக அர்த்தம். அதுவே, அக்குறியீடு 400 – 500 ஆக இருந்தால், காற்று மிகவும் மாசடைந்து இருப்பதாக அர்த்தம். காற்றுமாசு தீவிரமாக உள்ள நிலையில் டெல்லியில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

-ht