ஏர் இந்தியா விமானத்துக்கு குர்பத்வந்த் மிரட்டல் விடுத்த விவகாரம்: மிக தீவிரமாக விசாரித்து வருவதாக கனடா தகவல்

 ஏர் இந்தியா விமானத்துக்குப் பகிரங்கமாக மிரட்டல் விடுத்து காலிஸ்தான் பயங்கரவாதி குர்பத்வந்த் சிங் பன்னுன் வெளியிட்ட வீடியோ இந்தியாவில் பெரும் சலசலப்பை ஏற்படுத்திய நிலையில், இது குறித்து தீவிரமாக விசாரித்து வருவதாக கனடா சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நவம்பர் 5 ஆம் தேதி ஏர் இந்தியா விமானத்துக்குப் பகிரங்கமாக மிரட்டல் விடுத்து காலிஸ்தான்  குர்பத்வந்த் சிங் பன்னுன் வீடியோ ஒன்றை வெளியிட்டார். பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டுள்ள, சீக்கியர்களுக்கான நீதி என்ற (எஸ்எஃப்ஜெ) அமைப்பின் நிறுவனர் தான் இந்த குர்பத்வந்த் பன்னூன். இந்தியாவில் காலிஸ்தான் தனி நாடு கோரும் அனைத்து அமைப்புகளும் தடை செய்யப்பட்டுள்ளன. அதேபோல் தான் குர்பத்வந்தின் எஸ்எஃப்ஜெ அமைப்பும் தடை செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் குர்பத்வந்த் சிங்கின் அந்த வீடியோவில், “நவம்பர் 19-க்கு பின்னர் சீக்கியர்கள் யாரும் ஏர் இந்தியா விமானத்தில் பறக்க வேண்டாம். உங்கள் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படலாம். நவம்பர் 19 ஆம் தேதி உலக பயங்கரவாத கோப்பையின் (உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியை இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்) இறுதிப்போட்டி நடைபெற இருக்கிறது. அதன் பின்னர் பெரிய மாற்றங்கள் நிகழவுள்ளன.

டெல்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தின் பெயர் மாற்றப்படும். பஞ்சாப் விடுதலை அடைந்ததும் அந்த விமான நிலையத்தின் (இந்திராகாந்தி சர்வதேச விமானநிலையம்) பெயர் ஷாகித் பேனட் சிங், ஷாகித் ஷத்வந்த் சிங் காலிஸ்தான் விமான நிலையம் என்று மாற்றப்படும்” என்று கூறியுள்ளார். இது இந்தியாவில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, இந்திய அரசாங்கம் இது தொடர்பாக விசாரிக்குமாறு கனடாவுக்கு கோரிக்கையும் விடுத்திருந்தது.

இந்த நிலையில், சமூக வலைதளங்களில் பரப்பப்படும் அச்சுறுத்தல்கள் குறித்து கனடா விசாரித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. கனடா இந்த விவகாரத்தை மிக தீவிரமாக எடுத்துக் விசாரித்து வருவதாகவும், கனடா விமான நிலையங்களுக்குச் செல்லும் மற்றும் அங்கிருந்து இயக்கப்படும் ஏர் இந்தியா விமானங்களுக்கான பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது எனவும் சட்ட அமலாக்க துறை (law enforcement agency) இந்த விஷயத்தில் ஏற்கெனவே விசாரணையை ஆரம்பித்துள்ளதாகவும் கனடா சார்பில் இந்தியாவிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், அந்த வீடியோவில் வன்முறை எதுவும் இல்லை. எந்தவித அச்சுறுத்தலும் இல்லை என்று பன்னூன் மறுத்துள்ளார்.

மேலும் 1985-ம் ஆண்டு உலகை அதிரவைத்த ஏர் இந்தியா விமான தாக்குதலை காலிஸ்தானி பயங்கரவாதிகள் நிகழ்த்தினர். இதில் விபத்தில் 329 பேர் பலியாகினர். இது இன்றளவும் கொடூரமான தாக்குதலாக கருதப்படுகிறது.

 

-ht