கேரளாவில் சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தி கொலை செய்த இளைஞருக்கு மரண தண்டனை

கேரளாவில் 5 வயது சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த அசாஃபக் அலம் என்ற இளைஞருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கேரளாவின் கொச்சி மாவட்டம், அலுவா பகுதியில் உள்ள மொகத் பிளாசாவில் பிஹாரைச் சேர்ந்த அசாஃபக் அலாம் (29) என்பவர் கடந்த ஜூலை மாதம் அறை எடுத்து தங்கியுள்ளார். இந்நிலையில், அருகில் வசித்த பிஹார் தொழிலாளர் குடும்பத்தைச் சேர்ந்த 5-வயது சிறுமியிடம் அசாஃபக் அலாம் கடந்த ஜூலை 28ம் தேதி சாக்லெட் வாங்கித் தருவதாக கூறி கடத்திச் சென்றுள்ளார். அன்று மாலை 7 மணியளவில் தங்களின் 5-வயது மகளை காணவில்லை என பிஹார் புலம்பெயர் தொழிலாளர் தம்பதியினர் அலுவா காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இதையடுத்து சிறுமி வசிக்கும் பகுதியில் உள்ள சிசிடிவி கேமிராக்களின் பதிவை போலீஸார் ஆய்வுசெய்த போது அசாஃபக் அலாம் என்ற இளைஞர் அழைத்துச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், சிறுமியை கடத்தி கொலை செய்ததை ஒப்புக் கொண்டார். இதன் தொடர்ச்சியாக, அலுவா மார்க்கெட் குப்பை கிடங்கில் இருந்து சிறுமியின் உடல் மீட்கப்பட்டது.

இதையடுத்து, அசாஃபக் அலாம் போக்சோ சட்டம் மற்றும் இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 302ன் கீழ் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கு சிறப்பு நீதிபதி கே.சோமன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. வழக்கில் அரசுத் தரப்பு வழக்கறிஞர் மோகன்ராஜ் ஆஜராகி வாதாடினார். குற்றம் உறுதியாக நிரூபிக்கப்பட்டதை அடுத்து, இன்று தண்டனை அறிவிக்கப்பட்டது.

அதன்படி, இந்திய தண்டனைச் சட்டம் 302ன் படி, அசாஃபக் அலாம் சாகும் வரை தூக்கிலிட நீதிபதி சோமன் உத்தரவிட்டார். அதோடு, குழந்தைக்கு காயங்களை ஏற்படுத்தியது, குழந்தையின் பிறப்புறுப்பில் காயம் ஏற்படுத்தியது ஆகிய குற்றங்களுக்காக சாகும்வரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். மேலும், போக்சோ சட்டத்தின் கீழ், சாகும்வரை சிறையில் அடைப்பதற்கும் உத்தரவிட்டார். குழந்தைகள் தினமான இன்று இந்த தீர்ப்பு வழங்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

 

-ht