செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தால் உருவாக்கப்படும் போலி வீடியோக்களால் மிகப்பெரிய அச்சுறுத்தல் ஏற்பட்டிருக்கிறது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
செயற்கை நுண்ணறிவு உதவியுடன் டீப் ஃபேக் தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட நடிகைகள் ராஷ்மிகா மந்தனா, கேத்ரினா கைஃப், கஜோல் ஆகியோரின் போலி வீடியோக்கள், புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவி அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகின்றன. இந்நிலையில், டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற தீபாவளி விழாவில் பிரதமர் மோடி பேசியதாவது:
கரோனா பெருந்தொற்று காலம் ஒட்டுமொத்த மனித குலத்துக்கும் பெரும் வேதனையாக அமைந்தது. பெருந்தொற்று காலம் ஓய்ந்துதற்போது பண்டிகை, திருவிழாக்களை உற்சாகமாகக் கொண்டாடி வருகிறோம். தீபாவளி உள்ளிட்ட இந்திய விழாக்கள் சர்வதேச அளவில் பிரபலமடைந்து வருகின்றன.
தீபாவளியை ஒட்டி உள்ளூர் பொருட்களை வாங்குமாறு அழைப்பு விடுத்தேன். இதையேற்று கடந்த ஒரு வாரத்தில் மட்டும் ரூ.4.5 லட்சம் கோடி அளவுக்கு உள்நாட்டு தயாரிப்புகள் விற்பனையாகி உள்ளன. இதே உத்வேகத்துடன் வளர்ச்சி அடைந்த இந்தியாவை உருவாக்க அனைவரும் உறுதியேற்க வேண்டுகிறேன்.
-ht