நான் கைது செய்யப்பட்டாலும் 2024-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெறும்” என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் தெரிவித்துள்ளார். மேலும் அவர் தான் சிறை செல்வதற்கு தயங்கவில்லை என்றும் தெரிவித்தார்.
டெல்லியிலுள்ள தியாகராஜ் மைதானத்தில் வெள்ளிக்கிழமை நடந்த ஆம் ஆத்மி கட்சியின் நிர்வாகிகள் கூட்டத்தில் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கேஜ்ரிவால் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது, “புரட்சியாளர்களுக்கு சிறைக்கூடம் பஞ்சு மெத்தை போன்றது. நான் 15 நாட்கள் சிறையில் இருந்திருக்கிறேன். இது என் வாழ்க்கையில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை. எங்களுக்கு பதவி மீது ஆசை இல்லை. யாரும் என்னை கேட்காமல் 49 நாட்களில் பதவியை ராஜினாமா செய்த உலகின் முதல் முதல்வர் நான்தான். நீங்கள் டெல்லியில் வீடு வீடாகச் சென்று, நான் சிறையில் இருந்தாலும் முதல்வராக தொடர வேண்டுமா அல்லது ராஜினாமா செய்ய வேண்டுமா என்று கருத்து கேளுங்கள். ஒவ்வொரு வீடாக சென்று அவர்களுக்கு என்ன வேண்டும் என்று கேளுங்கள்.நமது தேர்தல் பிரச்சாரத்தின் தொடக்கமாக இது இருக்கும்.
டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியை வெற்றிகொள்ள முடியாது என்பது பாஜகவுக்கு நன்றாக தெரியும். அதனால் தான் சதி திட்டங்கள் தீட்டி ஆம் ஆத்மி தலைவர்களை சிறையில் அடைக்கிறார்கள். பிராந்தியக் கட்சியின் தலைவரை சிறையில் தள்ளிவிட்டால், தேர்தலில் அந்தக் கட்சிக்காக வேறு யாரும் பிரச்சாரத்துக்கு செல்ல மாட்டார்கள், அப்போது பாஜக எளிதாக தேர்தலில் வெற்றி பெற முடியும். அதனால் தான் ஆம் ஆத்மி கட்சி தேர்தலில் பங்கேற்க கூடாது என்பதற்காக என்னைச் சிறைக்கு அனுப்ப திட்டமிடுகிறார்கள். மேலும் அவர்கள், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, பிஹார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ், ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் ஆகியோரை சிறைக்கு அனுப்ப தயாராகி வருகிறார்கள். அப்போது தான் பாஜக எளிதாக வெற்றி பெற முடியும்.
நாட்டில் கல்விப் புரட்சியை கொண்டுவந்த ஒருவர் இருக்கிறார், அவர் மணீஷ் சிசோடியா. இப்போது சிறையில் அவர் இருக்கிறார். சுகாதார புரட்சி ஏற்படுத்திய சத்தியேந்திர ஜெயின் இடைக்கால ஜாமீனில் வெளியே இருக்கிறார். இன்று நமது கட்சியைச் சேர்ந்த நான்கு தலைவர்கள் சிறையில் இருக்கிறார்கள். அவர்கள் நமக்கெல்லாம் உந்து சக்தி. சிறைக்குச் செல்வதற்கு தயங்காதீர்கள். ஒரு வேளை மணீஷ் சிசோடியாவும், சஞ்சய் சிங்கும் இன்று ஆம் ஆத்மி கட்சியில் இருந்து வெளியேறினால், அடுத்த 24 மணி நேரத்தில் அவர்கள் சிறையில் இருந்து விடுவிக்கப்படுவார்கள்” இவ்வாறு கேஜ்ரிவால் பேசினார்.
மேலும் உலகில் வேகமாக வளர்ச்சியடைந்த கட்சியாக இருப்பதற்காக ஆம் ஆத்மி கட்சியினருக்கு அவர் வாழ்த்துக்கள் தெரிவித்தார். “உலகில் வேறு எந்தக் கட்சியும் இவ்வளவு வேகமாக முன்னேறியதில்லை. ஆம் ஆத்மி கட்சியைப் போல வேறு எந்தக் கட்சியாவது வேகமான முன்னேற்றம் அடைந்திருக்கிறதா என்று நான் கின்னஸ் சாதனை புத்தகத்திடம் கேட்கிறேன். இல்லை என்றால் அந்தச் சாதனைக்கான பெயரை ஆம் ஆத்மி கட்சிக்கு கொடுங்கள்” என்றார்.
-ht