போலி வீடியோக்கள் விவகாரம் தொடர்பாக சமூக வலைதளங்களுக்கு சம்மன்

செயற்கை நுண்ணறிவு உதவியுடன் டீப் ஃபேக் தொழில் நுட்பத்தில் உருவாக்கப்பட்ட நடிகைகள் ராஷ்மிகா மந்தனா, கேத்ரினாகைஃப், கஜோல் ஆகியோரின்போலி வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவி அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகின்றன.

இதுதொடர்பாக பிரதமர் மோடி சில நாட்களுக்கு முன்புகூறும்போது, “போலி வீடியோக்கள், ஆடியோக்கள், புகைப்படங்கள் மிகப்பெரிய அச்சுறுத்தலாக மாறியிருக்கிறது. நான் கர்பா நடனமாடுவது போன்ற போலி வீடியோவும் சமூகவலைதளங்களில் பரவி வருகிறது.செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்த வேண்டும்” என்றார். இதைத் தொடர்ந்து மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் டெல்லியில் நேற்று முன்தினம் கூறியதாவது:

டீப் ஃபேக் வீடியோக்கள் மிக தீவிரமான பிரச்சினையாகும். இதை தடுக்க மத்திய அரசு உறுதிபூண்டிருக்கிறது. சமூக வலைதளங்களில் பரவும் போலி வீடியோக்கள், ஆடியோக்கள், புகைப்படங்களை அடையாளம் கண்டறிந்து உடனடியாக அகற்ற வேண்டும் என்று சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு ஏற்கெனவே நோட்டீஸ் அனுப்பப்பட்டிருக்கிறது.

இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று சமூகவலைதள நிர்வாகங்கள் உறுதி அளித்துள்ளன. எனினும் பிரச்சினையின் தீவிரத்தை கருதி சமூகவலைதளங்களின் நிர்வாகங்களுக்கு மத்திய அரசு சம்மன் அனுப்பி உள்ளது. இதன்படி அடுத்த சில நாட்களில் சமூக வலைதளங்களின் நிர்வாகிகளுடன் அரசு தரப்பில் ஆலோசனை நடத்தப்படும். அப்போது மத்திய அரசு சார்பில் முக்கிய உத்தரவுகள் பிறப்பிக்கப்படும்.

இவ்வாறு அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் அண்மையில் வெளியிட்ட அறிவிப்பில், “போலி வீடியோக்கள், ஆடியோக்கள், புகைப்படங்களை உருவாக்கி சமூகவலைதளங்களில் வெளியிடுவோருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையுடன் ரூ.1 லட்சம் அபராதமும் விதிக்கப்படும்” என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் புகார் அளிக்கப்பட்ட 24 மணி நேரத்துக்குள் போலிவீடியோக்களை சமூக வலைதளங்கள் நீக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டு உள்ளது.

நடிகை ராஷ்மிகா மந்தனாவின் போலி வீடியோ தொடர்பாக டெல்லி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வீடியோவை சமூக வலைதளத்தில் வெளியிட்டது யார், அவர் தொடர்பான முழுவிவரங்களை அளிக்குமாறு மெட்டா (பேஸ்புக்) நிறுவனத்துக்கு டெல்லி போலீஸார் நோட்டீஸ் அனுப்பி உள்ளனர்.

மேலும் நடிகை கஜோலின் போலி வீடியோ, நடிகை கேத்ரினா கைஃப், கிரிக்கெட் வீரர் சச்சின் மகள் சாரா டெண்டுல்கரின் போலி புகைப்படம் தொடர்பாகவும் மத்திய அரசு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

 

 

-ht