ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் 13-வது பதிப்பில் 1.25 மில்லியன் ரசிகர்கள் கலந்து கொண்டது உலக சாதனையாக மாறியுள்ளது.
ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் 13-வது பதிப்பில் பட்டம் வென்று அசத்தியுள்ளது ஆஸ்திரேலியா. 10 அணிகள் கலந்துகொண்ட இந்த கிரிக்கெட் திருவிழா கடந்த அக்டோபர் 5-ம் தேதி தொடங்கியது. லீக் சுற்றுகளின் முடிவில் இந்தியா, நியூஸிலாந்து, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா ஆகிய 4 அணிகள் அரை இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றன. இதில் இந்தியா 70 ரன்கள் வித்தியாசத்தில் நியூஸிலாந்து அணியையும், ஆஸ்திரேலியா 3 விக்கெட்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்காவையும் வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றன.
கோப்பை யாருக்கு என்பதை தீர்மானிக்கும் இறுதிப் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்த ஆட்டம் உலகின் மிகப்பெரிய மைதானமான 1.30 லட்சம் பேர் அமர்ந்து பார்க்கக்கூடிய அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடந்தேறியது. இந்த ஆட்டத்தில் வென்று 6வது முறையாக கோப்பையை கைப்பற்றியது ஆஸ்திரேலியா.
இந்த ஆட்டம் உட்பட, இந்த உலகக் கோப்பை தொடர் முழுவதையும் 1.25 மில்லியன் ரசிகர்கள் நேரில் கண்டுகளித்தனர். 45 நாட்கள் நடந்த இந்த தொடரை கிட்டத்தட்ட 12,50,307 ரசிகர்கள் மைதானத்துக்கு வந்து பார்த்துள்ளனர். இது உலக சாதனையாக மாறியுள்ளது. கடந்த 2015ல் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் நடந்த உலகக் கோப்பை தொடரை 1,016 மில்லியன் மக்கள் பார்த்ததே சாதனையாக இருந்தது. தற்போது அதனை இந்தியாவில் நடந்த உலகக் கோப்பை தொடர் முறியடித்துள்ளது. விளையாட்டு வரலாற்றில் மிகப்பெரிய ஐசிசி நிகழ்வுகளில் ஒன்றாக இது மாறியுள்ளது.
இந்த தொடரின் ஆரம்பத்தில் பார்வையாளர்கள் குறைவாகவே வந்தனர். எனினும், இந்திய அணியின் ஆட்டங்களுக்கு பிறகு அதிகமான ரசிகர்கள் வருகைப் புரிந்ததால் இந்த அளவுக்கு எண்ணிக்கை கூடியுள்ளது. இந்தியா – ஆஸ்திரேலியா இடையேயான இறுதிப் போட்டியில் மட்டும் சுமார் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட ரசிகர்கள் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-ht