ஜனநாயகத்துக்கு புதிய அச்சுறுத்தலாக டீப்ஃபேக் (DeepFake) உருவெடுத்துள்ளது. அவ்வாறான போலிகளை உருவாக்குவோருக்கும், அவை பகிரப்படும் தளங்களுக்கும் அபராதம் விதிக்கப்படுவது குறித்தும் யோசித்து வருகிறோம்” என மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
டீப்ஃபேக் விவகாரம் நாளுக்கு நாள் விஸ்வரூபம் எடுத்துவரும் நிலையில், சமூக வலைதள நிறுவனங்களுடன் மத்திய தொலைத்தொடர்பு, மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் இன்று ஆலோசனை நடத்தினார். அப்போது அவர் கூறுகையில், “டீப்ஃபேக்குகள் ஜனநாயகத்துக்கு புதிய அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளது. டீப்ஃபேக்குகளைக் கண்டறிதல், அவை பரவுவதை தடுத்தல், அது தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்துதல் ஆகிய செயல்பாடுகள் பற்றி விவாதிக்கப்பட்டு முடிவுவெடுக்கப்பட்டிருக்கிறது. அதேபோல டீப்ஃபேக் வீடியோ மூலம் ஏற்படும் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள புதிய சட்டங்கள் உருவாக்கப்படும்.
மேற்கண்ட முடிவுகளை அரசு மற்றும் சோஷியல் மீடியாக்கள் தரப்பிலும் உறுதியாக பின்பற்ற ஒப்புக்கொள்ளப்பட்டிருக்கிறது. தற்போதுள்ள விதிகளை திருத்துவது அல்லது புதிய விதிகளை கொண்டு வருவது அல்லது புதிய சட்டத்தை உருவாக்குவது போன்ற வடிவங்களில் ஒழுங்குமுறைகள் இருக்கலாம். புதிய விதிமுறைகள் கொண்டு வரப்படும். ஒரு சில வாரங்களில் சட்ட வரைவுகளை தயார் செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்படும். போலிகளை உருவாக்கும் படைப்பாளிகள் மற்றும் அவை பகிரப்படும் தளங்கள் ஆகிய இரு தரப்புக்கும் அபராதம் விதிக்கப்படுவது குறித்தும் யோசித்து வருகிறோம். டீப் ஃபேக் போன்ற போலிகளுக்கு எதிராக ஒழுங்குமுறை (Regulations) தேவை என்பது தெளிவாகத் தெரிகிறது” என்றார்.
என்ன நடந்தது? – செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்கள் வளர்ச்சிஅடைந்து வருகிற நிலையில், அவற்றைப் பயன்படுத்தி அரசியல் தலைவர்கள், பிரபலங்களின் போலி புகைப்படங்கள், வீடியோக்களை உருவாக்கும் போக்கு அதிகரித்துள்ளது. இத்தகைய போலி உருவாக்கங்கள் ‘டீப்ஃபேக்’ என்று அழைக்கப்படுகின்றன. நடிகைகள் ராஷ்மிகா மந்தனா, கத்ரினா கைஃப், கஜோல் ஆகியோரின் முகங்களை வேறு சிலரின் முகங்களோடு பொருத்தி வெளியிடப்பட்ட மிக மோசமான டீப்ஃபேக் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகின. செயற்கை நுண்ணறிவு செயலியைக் கொண்டு இவ்வாறு வீடியோக்கள் தயாரிக்கப்பட்டது தெரிய வந்தது.
இதனிடையே, பிரதமர் நரேந்திர மோடி, பெண்களோடு சேர்ந்து கார்பா நடனம் ஆடுவதாக சமீபத்தில் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலானது. இதையடுத்து அவர் “நான் கார்பா நடனம் ஆடியது போன்ற ஒரு வீடியோவை சமீபத்தில் பார்த்தேன். இதுபோன்ற பல வீடியோக்கள் இணையதளத்தில் வைரலாகி வருகின்றன. இதுபோன்ற போலி வீடியோக்கள் மிகவும் கவலை அளிக்கின்றன” என்றார்.
இதுபோன்ற போலி வீடியோக்களை தயாரித்து வெளியிடுபவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய மின்னணு தகவல் தொழில்நுட்ப அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் கடந்த வாரம் எச்சரித்தார். “இதுபோன்ற வீடியோக்களை தயாரித்து வெளியிடுபவர்கள், பரப்புபவர்கள் மீது தகவல் தொழில்நுட்ப சட்டம் 2021-ன்படி நடவடிக்கை எடுக்கப்படும்” என்று அவர் கூறி இருந்தார். இந்த சட்டப்படி அதிகபட்சம் ரூ.1 லட்சம் அபராதம் மற்றும் 3 ஆண்டு கால சிறைத் தண்டனை விதிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
-ht