பெங்களூருவில் முதல் முறையாக நடைபெற்ற கம்பாளா போட்டி

கம்பாளா போட்டி பெங்களூருவில் முதல் முறையாக நேற்று நடைபெற்ற‌து. இதனை காண 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஆர்வத்தோடு குவிந்தனர்.

கர்நாடக மாநிலத்தில் மங்களூரு,உடுப்பி உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் துளு மொழி பேசும் மக்கள் கணிசமான எண்ணிக்கையில் வாழ்கின்றனர். துளு மக்கள் 500 ஆண்டுகளுக்கும் மேலாக பாரம்பரிய விளையாட்டான கம்பாளா போட்டியை நெல் அறுவடை முடிந்த பின்னர் நடத்தி வருகின்றனர். கடந்தஆண்டு வெளியான ‘கந்தாரா’ என்றகன்னட திரைப்படத்தின் வாயிலாகஇந்த விளையாட்டு உலகமெங்கும்சென்றடைந்தது.

கடலோர பகுதிகளில் மட்டுமே நடந்து வந்த கம்பாளா போட்டியை பெங்களூருவில் நடத்த வேண்டும் என கம்பாளா ஆர்வலர்கள் கோரி வந்தனர். இதையடுத்து முதல்வர் சித்தராமையா நவம்பர் 25, 26 ஆகிய தேதிகளில் பெங்களூருவில் நடத்த அனுமதி வழங்கினார்.

பெங்களூருவில் உள்ள அரண்மனை மைதானத்தில் பந்தயம் நடத்துவதற்காக பெரும் செயற்கை வயல்கள் உருவாக்கப்பட்டன. பரிசளிப்பு விழா நடைபெறும் மேடைக்கு மறைந்த கன்னட நடிகர் புனித் ராஜ் குமாரின் பெயர் சூட்டப்பட்டது. கர்நாடக முன்னாள் முதல்வர்கள் எடியூரப்பா, சதானந்தகவுடா ஆகியோர் நேற்று காலையில் தீபாரதனை செய்து க‌ம்பாளா போட்டியை தொடங்கி வைத்தன‌ர். இதைத்தொடர்ந்து 50-க்கும் மேற்பட்ட எருமை காளைகள் கம்பாளா போட்டியில் பங்கேற்றன. மாலையில் வெற்றி பெற்ற காளைகளின் உரிமையாளர்களுக்கு முதல் வர்சித்தராமையா பரிசு வழங்கினார்.

பின்னர் அவர் பேசுகையில், “பெங்களூருவில் கம்பாளா போட்டிநடத்தியதன் மூலம் கடலோர கர்நாடகாவின் பாரம்பரிய கலை உலகமெங்கும் பரவ வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்த கலையின் வாயிலாக கடலோர கர்நாடக மக்களின் பண்பாட்டை பிறமொழியினரும் அறிந்துகொள்வார்கள்” என்றார்.

 

 

-ht