சீனாவில் புதிய வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதால், இந்தியாவில் கண்காணிப்பை தீவிரப்படுத்தும் சுகாதாரத் துறை அமைச்சகம்

சீனாவில் குழந்தைகளின் நுரையீரலைத் தாக்கும் புதிய வகையான வைரஸ் தொற்று வேகமாக பரவி வருகிறது. எச்9என்2 வைரஸ் என கண்டறியப்பட்டுள்ள அந்த நிமோனியா தொற்று சுவாசத்தில் பல்வேறு பிரச்சினைகளை ஏற்படுத்தி வருகிறது.

இந்த வைரஸ் தொற்று கொரோனாவை போலவே மற்ற நாடுகளுக்கும் பரவுவதற்கு வாய்ப்புள்ளதால், இந்த விஷயத்தில் உலக சுகாதார நிறுவனம் தனி கவனம் செலுத்தி வருகிறது. இதற்கிடையே, நிமோனியா, தீவிர சுவாச பாதிப்பு, நுரையீரல் தொற்றுகளை தீவிரமாக கண்காணிக்குமாறும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளாக மருந்துகள், ஆக்சிஜன் உள்ளிட்ட சுகாதார கட்டமைப்புகளை தயார் நிலையில் வைத்திருக்குமாறும் அனைத்து மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கடிதம் மூலமாக அறிவுறுத்தியுள்ளது.

இந்நிலையில், தமிழக சுகாதாரத் துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி தலைமையில் சுகாதாரத்துறை அதிகாரிகளுடனான அவசர ஆலோசனை கூட்டம் சென்னையில் நேற்று நடைபெற்றது. தொடர்ந்து, சீனாவில் பரவி வரும் வைரஸ் தன்மை குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

இதுகுறித்து, பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வவிநாயகம் கூறும்போது, “சீனாவில் பரவும் வைரஸ் நோய், எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்களுக்கு, காய்ச்சல், சளி, இருமல், உடல்சோர்வு போன்ற பாதிப்புகளை ஏற்படுத்தும். அதேநேரம், சீனாவில் இருந்து தமிழகத்தில் வைரஸ் பரவாமல் தடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள வைரஸ் தன்மைகளில் மாற்றம் ஏற்பட்டுள்ளதா என்பதும் கண்காணிக்கப்பட்டு வருகிறது” என்றார்.

இயக்குநர் சுற்றறிக்கை: தமிழக மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககம், மருத்துவ சேவைகள் இயக்ககம் மற்றும் சுகாதாரத் துறை அதிகாரிகளுக்கு பொது சுகாதாரத்துறை அனுப்பியுள்ள சுற்றறிக்கை: இன்ஃப்ளூயன்ஸா, மைக்கோபிளாஸ்மா, சார்ஸ் கோவிட் ஆகிய பாதிப்புகளால் ஏற்படும் நிமோனியா தொற்றால் சீனாவில் குழந்தைகள் அதிகமாக பாதிக்கப்படுகின்றனர்.

அதற்கான மருத்துவக் கட்டமைப்பை மேம்படுத்துவதுடன் அனைத்து மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், தனியார் மருத்துவமனைகள், ஆய்வகங்கள், அரசு மருத்துவமனைகள் என அனைத்து இடங்களிலும் நுரையீரல் தொற்று மற்றும் சுவாச பாதிப்புகளை கண்காணித்து, நிமோனியா பாதிப்பு சார்ந்த நோயாளிகள் விவரங்களை ஒருங்கிணைந்த நோய்த் தொற்று கண்காணிப்பு தளத்தில் பதிவேற்ற வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

-ht