நியூயார்க்கில் சீக்கிய பிரிவினைவாதியை கொல்ல இந்தியர் சதி; அமெரிக்காவின் புகார் பற்றி இந்தியா விசாரணை

நியூயார்க்கில் வசித்து வரும் சீக்கிய பிரிவினைவாதியை கொல்ல இந்தியர் ஒருவர் சதித்திட்டம் தீட்டியதாக அமெரிக்க குற்றம் சாட்டியுள்ளது. இதுகுறித்து விசாரணை நடத்தப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

‘நீதிக்கான சீக்கியர்கள்’ என்ற அமைப்பின் தலைவரான குர்பத்வந்த் சிங் பன்னுன், பல்வேறு பயங்கரவாத குற்றச்சாட்டுகளின் கீழ் இந்திய புலனாய்வு அமைப்புகளால் தேடப்பட்டு வருகிறார். அமெரிக்காமற்றும் கனடா ஆகிய இரட்டை குடியுரிமையை பெற்றுள்ள பன்னுன் தற்போது அமெரிக்காவில் நியூயார்க் நகரில் வசித்து வருகிறார். இவரை கொலை செய்ய சிலர் சதித் திட்டம் தீட்டியதாகவும், அது முறியடிக்கப்பட்டதாகவும் பைனான்சியல் டைம்ஸ் சில ஆதாரங்களை மேற்கோள் காட்டி செய்தி வெளியிட்டது.

இந்த நிலையில் நேற்று முன்தினம், அமெரிக்க பெடரல் வழக்கறிஞர்கள் மன்ஹாட்டன் நீதிமன்றத்தில் கூறுகையில், “இந்தியாவைச் சேர்ந்த நிகில் குப்தா என்பவர் இந்திய அரசு அதிகாரிகளுடன் இணைந்து பன்னுனை கொலை செய்ய திட்டம் தீட்டியுள்ளார். அந்த சதிச் செயல்அமெரிக்க அதிகாரிகளால் முறியடிக்கப்பட்டது.

தற்போது, செக் குடியரசு அதிகாரிகள்குப்தாவை கைது செய்து காவலில் வைத்துள்ளனர். அவரை அமெரிக்காவுக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. அதன் பிறகு அவரிடம் இதுதொடர்பாக தீவிர விசாரணை நடத்தப்படும் என்று தெரிவித்தனர். இந்த சூழ்நிலையில், அமெரிக்க மண்ணில் சீக்கியப் பிரிவினைவாதியை கொல்ல சதி செய்ததாக இந்திய நாட்டவர் மீது அமெரிக்க குற்றம் சாட்டியுள்ளது கவலைக்குரிய விஷயம் என இந்தியா நேற்று தெரிவித்தது.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பக்சி கூறியதாவது:

பன்னுனை கொலை செய்ய திட்டமிட்டதாக இந்தியர் மீது அமெரிக்கா குற்றம்சாட்டியுள்ளது தீவிரமான விஷயம். சர்வதேச அளவில் திட்டமிட்டு நடத்தப்படும் குற்ற சம்பவங்களின் பின்னணியைவெளிக்கொண்டு வர உயர்மட்ட அளவிலான விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

இதன் வெளிப்படைத் தன்மையான முடிவுகளால் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும். அமெரிக்க தரப்பில் இதுதொடர்பாக சில தகவல்கள் வழங்கப்பட்டுள்ளன. அவை தேசிய பாதுகாப்புக்கு இடையூறு விளைவிப்பதால் இந்த விவகாரத்தை சம்பந்தப்பட்ட துறைகள் மிக கவனமாக கையாண்டு வருகின்றன. பாதுகாப்பு தொடர்பான விவகாரங்களில் மேலும் எந்த தகவலையும் வெளிப்படையாக பகிர முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.

காலிஸ்தான் தீவிரவாதி நிஜ்ஜார் கொலையில் இந்தியா மீது கனடா ஏற்கெனவே குற்றம் சாட்டியுள்ள நிலையில் அமெரிக்காவும் அதேபோன்ற குற்றச்சாட்டை தெரிவித்துள்ளது இந்தியாவின் வெளியுறவு விவகாரத்தில் நெருக்கடியை மேலும் அதிகரித்துள்ளது.

 

 

-ht