இந்தியா பற்றி தவறான செய்திகளை பரப்பும் சீனாவின் ஃபேஸ்புக் கணக்குகளை நீக்கிய மெட்டா

இந்தியா பற்றி தவறான செய்திகளை பரப்பும் சீன ஃபேஸ்புக் கணக்குகள் வெற்றிகரமாக நீக்கப்பட்டுள்ளதாக மெட்டா நிறுவனத்தின் காலாண்டு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஃபேஸ்புக், வாட்ஸ் அப் மற்றும் இன்ஸ்டாகிராமின் தாய் நிறுவனமான மெட்டா சமீபத்தில் அச்சுறுத்தல் தொடர்பான காலாண்டு அறிக்கையை வெளியிட்டுள்ளது.

சீனாவில் இருந்து தொடங்கப்படும் போலி ஃபேஸ்புக் கணக்குகள், இந்தியா பற்றி தவறான செய்திகளைப் பரப்புவது அதிகரித்து வருவதாக இந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. மேலும் இந்த போலி கணக்குகளின் பெரிய வலையமைப்பை இந்த ஆண்டு அகற்றியதாகவும் மெட்டா நிறுவனம் தெரிவிக்கிறது.

இந்த கணக்காளர்கள் தங்களை இந்தியர்களாக காட்டிக்கொண்டு, இந்திய அரசியல் மற்றும் தேசிய பாதுகாப்பு தொடர்பான தவறான தகவல்களை பரப்புவதில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

பத்திரிகையாளர்கள், வழக்கறிஞர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் என ஃபேஸ்புக்கில் கற்பனையான நபர்களால் இந்தநெட்வொர்க் இயக்கப்படுகிறது.

திபெத் மற்றும் அருணாச்சல பிரதேசத்தில் பெருமளவில் ஆங்கிலத்திலும் குறைந்த அளவில் ஹிந்தி மற்றும் சீன மொழியிலும் இந்த நெட்வொர்க் பதிவுகளை வெளியிடுகிறது.

திபெத்தை குறிவைத்து வெளியிடப்படும் பதிவுகளில் தங்களை சுதந்திர திபெத்துக்கு ஆதரவாளர்களாக காட்டிக்கொள்ளும் இந்த நபர்கள், இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ள தலாய் லாமா மற்றும் அவரை பின்பற்றுபவர்கள் மீது ஊழல் மற்றும் பாலியல் குற்றச்சாட்டுகளை சுமத்துகின்றனர்.

அருணாச்சல பிரதேசத்தை குறிவைத்து வெளியாகும் பதிவுகளில் இந்திய ராணுவம், இந்திய விளையாட்டு வீரர்கள் மற்றும் இந்திய அறிவியல் சாதனைகள் பற்றி நேர்மறையான கருத்துகள் இடம்பெற்றாலும் இந்திய மாநிலமான மணிப்பூரில் ஊழல் மற்றும் இன மோதலை இந்திய அரசு ஆதரிப்பதாக குற்றம் சாட்டப்படுகிறது.

இந்நிலையில் தங்களின் அனைத்து தளங்களிலிருந்தும் இந்த நெட்வொர்க் வெற்றிகரமாக அகற்றப்பட்டுள்ளதாக மெட்டா நிறுவனம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

 

 

 

-ht