கனமழையால் சென்னை மாநகரே வெள்ளத்தில் தத்தளித்துக் கொண்டிருக்கிறது. பெரும்பாலான இடங்களில் மழைநீர் அகற்றப்பட்டாலும், இன்னும் பல இடங்களில் முழங்கால் அளவுக்கு மேல் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இந்நிலையில், வீடுகளுக்குள் புகுந்த மழைநீரை அகற்றக் கோரியும், மின் இணைப்பு, உணவு வழங்கக் கோரியும் சென்னையின் பல இடங்களில் நேற்று முன்தினம் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன் தொடர்ச்சியாக, நேற்றும் பல இடங்களில் போராட்டம் நடந்தது. அந்த வகையில், வியாசர்பாடியில் உள்ள குடியிருப்பு பகுதிகளுக்குள் மழைநீர் புகுந்து, 3 நாட்களாக அதை அகற்ற அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக்கூறி, நேற்று வியாசர்பாடி கல்யாணபுரம் பகுதியில் மக்கள் மறியலில் ஈடுபட்டனர். அப்போது, அந்த வழியாக வந்த மாநகர பேருந்து மீது அப்பகுதி மக்கள் கற்களை வீசினர். இதனால், பேருந்தின் முன்பக்க கண்ணாடி உடைந்தது. உடனே சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார், பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போகச்செய்தனர். பேருந்து கண்ணாடி உடைக்கப்பட்டது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
இதேபோல், வண்ணாரப்பேட்டையில் மழைநீர் அகற்றப்படாமல் இருந்ததைக் கண்டித்து கல்லறை சாலை, லாலாகுண்டா, சீனிவாசபுரம், கோஜராஜநகர் பகுதி மக்கள் நேற்று கல்லறை சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, அந்த பகுதிக்கு ஆய்வுக்கு வந்த அமைச்சர் சேகர்பாபுவை முற்றுகையிட்ட மக்கள்,தண்ணீரை உடனடியாக அகற்றி,மின்சார இணைப்பைக் கொடுக்கவேண்டும் என வலியுறுத்தினர். மழைநீர் அகற்றப்பட்டு, மின்சாரம்வழங்கப்படும் என அமைச்சர் உறுதியளித்ததையடுத்து மக்கள் கலைந்து சென்றனர்.
இதேபோல், திருவான்மியூர் சந்திப்பு உட்பட பல இடங்களில் 2-வது நாளாக நேற்றும் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மயிலாப்பூர் லஸ் சிக்னலில், 4 புறங்களிலும் வாகனங்களை அனுமதிக்காமல் பி.எஸ்.சிவசாமி சாலை பகுதி மக்கள் 2-வது முறையாக நேற்று இரவும் மறியலில் ஈடுபட்டனர். மின்சாரம் இல்லை. குடிநீர் கிடைக்கவில்லை. வீடுகளுக்குள் கழிவுநீர் தேங்கியுள்ளது. வெள்ளநீரை வெளியேற்ற ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என மக்கள் புகார் தெரிவித்தனர்.
-ht