அடுத்த 30 ஆண்டுகளுக்கு பாஜகவுக்கு எதிராகப் போராடுவேன் – எம்பி பதவி பறிக்கப்பட்ட மஹுவா

இன்னும் 30 ஆண்டுகளுக்கு நான் உங்களுக்கு (பாஜக) எதிராக நாடாளுமன்றத்துக்கு வெளியே இருந்தும், உள்ளே வந்தும் கேள்வி கேட்பேன்” என்று ஆவேசமாக சூளுரைத்துள்ளார் எம்.பி. பதவியில் இருந்து நீக்கப்பட்ட திரிணமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மஹுவா மொய்த்ரா.

பணம் பெற்றுக்கொண்டு நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பியதாக கூறப்படும் குற்றச்சாட்டில், திரிணமூல் காங்கிரஸ் எம்.பி மஹுவா மொய்த்ரா இன்று (வெள்ளிக்கிழமை) பதவி நீக்கம் செய்யப்பட்டார். தனது பதவி பறிக்கப்பட்டப் பின்னர் நாடாளுமன்ற வளாகத்தில் அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அவருடன் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி உள்பட பல்வேறு எதிர்க்கட்சி எம்.பி.க்கள் இருந்தனர். அப்போது மஹுவா கூறும்போது, ”நான் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்ப பணமோ, பொருட்களோ பெற்றதற்கான ஆதாரங்கள் இல்லை. எனது மின்னஞ்சலை பயன்படுத்தும் அதிகாரம் பகிரப்பட்டது என்ற ஒரே ஒரு ஆதாரத்தின் அடிப்படையில் ஒட்டுமொத்த குற்றச்சாட்டும் முன்வைக்கப்பட்டுள்ளது. அப்படிப் பார்த்தால் மின்னஞ்சல் விவரங்களைப் பகிரக் கூடாது என்ற சட்டதிட்டங்களும் இல்லை.

ஒருவேளை, நாடாளுமன்றத்தில் என் வாயை அடைத்துவிட்டால் போதும், அதானி பிரச்சினை தீர்ந்துவிடும் என மோடி அரசு நினைக்கிறதுபோல். ஆனால், நீங்கள் ஒரு பெண் எம்.பி.யின் வாயை அடைக்க எந்த எல்லை வரை செல்வீர்கள் என்பதையே இந்த பதவிப் பறிப்பு நிகழ்வு காட்டுகிறது. நாளையே எனது வீட்டுக்கு சிபிஐ அதிகாரிகள் அனுப்பப்படுவார்கள். பகுஜன் சமாஜ் கட்சி எம்.பி. டேனிஷ் அலியை பாஜக எம்.பி. ரமேஷ் பிதூரி அவதூறாகப் பேசியபோது அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இது சிறுபான்மயினர் மீது பாஜக என்ன மாதிரியான நிலைப்பாட்டைக் கொண்டிருக்கிறது என்பதற்குச் சான்று. பெண்கள், சிறுபான்மையினருக்கு எதிராக இந்த ஆட்சி செயல்படுகின்றது. முழுக்க முழுக்க அதானி என்ற ஒருவருக்காகவே பாஜக ஆட்சி நடக்கின்றது.

மக்களவை நெறிமுறைக் குழுவுக்கு என்னை வெளியேற்ற எந்த அதிகாரமும் இல்லை. ஆனால், இந்த அரசு நாடாளுமன்ற நெறிமுறைக் குழுவினை எதிர்க்கட்சிகளை ‘புல்டோஸ்’ செய்யும் ஆயுதமாக மாற்றி இருக்கிறது. நெறிமுறைக் குழு உருவாக்கப்பட்டதன் நோக்கம் இதுவே அல்ல. எனக்கு இப்போது 49 வயதாகிறது. நான் இன்னும் 30 ஆண்டுகளுக்கு பாஜகவுக்கு எதிராக நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும், வெளியேயும் போராடுவேன். இது பாஜக ஆட்சி முடியும் காலம். நான் மீண்டும் வருவேன்” என்றார்.

எம்.பி. பதவி பறிப்பு: நாடாளுமன்றத்தில் அதானிக்கு எதிராக கேள்வியெழுப்ப தொழிலதிபர் ஹிராநந்தானியிடம் திரிணமூல் எம்பி மஹுவா மொய்த்ரா லஞ்சம் பெற்றது தொடர்பான குற்றச்சாட்டு குறித்து பாஜக எம்.பி., வினோத் குமாா் சோன்கா் தலைமையிலான மக்களவை நெறிமுறைக் குழு விசாரணை நடத்தி, அதன் அறிக்கையை நவ.9-ஆம் தேதி வெளியிட்டது. அந்த அறிக்கையில், மஹுவா மொய்த்ராவை பதவி நீக்கம் செய்ய பரிந்துரைக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து திரிணமூல் காங்கிரஸ் எம்.பி மஹுவா மொய்த்ராவை பதவி நீக்கம் செய்யக் கூறும் மக்களவை நெறிமுறைக் குழு பரிந்துரை இன்று (வெள்ளிக்கிழமை) நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அப்போது, எதிர்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் மக்களவை மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் அவை மீண்டும் கூடியபோது அவையில் கடுமையான அமளி நிலவியது. மஹுவா தனது தரப்பு கருத்தை முன்வைக்க விரும்பினார். ஆனால், அவருக்கு அவையில் பேச அனுமதி அளிக்கப்படவில்லை. மஹுவாவுக்கு அவையில் பேச அனுமதி அளிக்கக் கோரி மக்களவையில் எதிர்க்கட்சியினர் குரல் எழுப்பினர். கடும் அமளிக்கு மத்தியில் மஹுவா மொய்த்ரா பதவி நீக்கம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

இது தொடர்பாக மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கூறுகையில், “மக்களவை நெறிமுறைக் குழு பரிந்துரைக் குழுவின் அறிக்கையை ஏற்கப்படுகிறது. மஹுவா மொய்த்ராவின் நடவடிக்கை அறமற்றது, அநாகரிகமானது. அவையின் மாண்பை சிதைக்கும் வகையில் மஹுவா செயல்பட்டுள்ளார். அதனால் அவர் மக்களவை உறுப்பினராகத் தொடர இயலாது” என்று தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து நாடாளுமன்றத்துக்கு வெளியே செய்தியாளர்களை சந்தித்த மஹுவா, ”என் மீதான குற்றச்சாட்டுகளை முழுமையாக விசாரணைக்கு உட்படுத்தவில்லை. எந்த ஒரு குற்றச்சாட்டும் ஆதாரத்துடன் நிரூபிக்கப்படவில்லை. எனக்கு நாடாளுமன்றத்தில் பேசக்கூட அனுமதி அளிக்கப்படவில்லை. பெண்கள், சிறுபான்மையினர் என அனைத்து தரப்பினரின் உரிமையையும் மத்திய அரசு பறிக்கிறது. அதானி என்ற ஒருவருக்காக மட்டுமே இந்த அரசாங்கம் இயங்குகிறது” எனக் காட்டமாகத் தெரிவித்தார்.

மேற்கு வங்கத்தின் கிருஷ்ணாநகர் மக்களவைத் தொகுதியின் திரிணமூல் காங்கிரஸ் எம்பி மஹுவா மொய்த்ரா. இவர் மக்களவையில் இதுவரை 61 கேள்விகளை எழுப்பியுள்ளார். இதில் 50 கேள்விகள் அதானி குழுமம் தொடர்பானவை. இந்த கேள்விகளை எழுப்ப ரியல் எஸ்டேட் தொழிலதிபர் ஹிராநந்தானியிடம் இருந்து மொய்த்ரா ரூ.2 கோடி வரை லஞ்சமாக பெற்றதாக குற்றம் சாட்டப்பட்டது. மேலும், மொய்த்ராவின் நாடாளுமன்ற இணைய கணக்கை துபாயில் வசிக்கும் ஹிராநந்தானி பயன்படுத்தியதும் கண்டுபிடிக்கப்பட்டது.

மொய்த்ராவின் முன்னாள் காதலர் ஜெய் ஆனந்த் தேஹத்ராய் இந்த ரகசியத்தை அம்பலப்படுத்தினார். இதை ஆதாரமாக வைத்து பாஜக எம்பி நிஷிகாந்த் துபே மக்களவைத் தலைவர் ஓம் பிர்லாவிடம் புகார் அளித்தார். இதுதொடர்பாக நாடாளுமன்ற நெறிமுறைகள் குழு விசாரணை நடத்தி, மொய்த்ராவை பதவி நீக்கம் செய்ய பரிந்துரை செய்தது. நெறிமுறைக் குழு விசாரணையின்போது மஹுவா பாதியிலேயே வெளியேறினார். மேலும், நெறிமுறைக் குழு தலைவர் அநாகரீகமான கேள்விகளை எழுப்புவதாக குற்றம் சாட்டினார். ஆனால், உண்மையான கேள்விகளுக்கு பதிலளிப்பதை தவிர்ப்பதற்காகவே மஹுவா இந்த நாடகத்தை ஆடியதாகவும், இதற்கு எதிர்க்கட்சி உறுப்பினர்களும் அவருக்கு துணை போனதாகவும் நெறிமுறைக் குழு தலைவர் குற்றம் சாட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

-ht