மழை, வெள்ளம் பாதித்த பகுதி குழந்தைகளுக்கு ரூபெல்லா தடுப்பூசி செலுத்துதல் அவசியம்

மழை, வெள்ளம் பாதித்த பகுதிகள் 9 மாதம் தொடங்கி 15 வயது வரை குழந்தைகளுக்கு ரூபெல்லா தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மிக்ஜாம் புயலினால் பாதிக்கப்பட்ட சென்னை, திருவள்ளுர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள், வட்டார அரசு மருத்துவமனைகள், மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகள், மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் தடுப்பூசி இருப்பு உறுதி செய்யப்பட்டிருக்கிறது. எனவே மழை வெள்ளம் பாதித்த பகுதிகளைச் சார்ந்த பொதுமக்கள் ரூபெல்லா தடுப்பூசி போட்டுக் கொள்வது அவசியம். அதனை கடைப்பிடிக்க வேண்டும் என்று மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வலியுறுத்தியுள்ளார்.

மிக்ஜாம் புயலினால் பாதிக்கப்பட்ட சைதாப்பேட்டை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கோதாமேடு பகுதியில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மழைக்கால சிறப்பு மருத்துவ முகாமினை தொடங்கி வைத்து இன்று ஆய்வு செய்தார். பின்னர், இது குறித்து செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:-

தமிழ்நாடு முழுவதிலும் சிறப்பு மருத்துவ முகாம்கள் 3000 இடங்களில் தற்போது தொடங்கி வைக்கப்பட்டிருக்கிறது. இந்த சிறப்பு மருத்துவ முகாம்கள் சென்னையில் 500 இடங்களில் முடிவு செய்யப்பட்டிருந்தது. ஆனால் தற்போது 679 இடங்களில் கூடுதலாக நடைபெற்று வருகிறது. மேலும் சைதாப்பேட்டை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கோதாமேடு பகுதியில் இன்று தொடங்கி வைத்திருக்கிறேன். தமிழ்நாடு முழுவதும் இந்த சிறப்பு மருத்துவ முகாம்கள் 3000 இடங்கள் என்று அறிவிக்கப்பட்டு தற்போது கூடுதல் இடங்களில் நடைபெற்று வருகிறது. குறிப்பாக மிக்ஜாம் புயலினால் பாதிக்கப்பட்ட சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளுர், காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களில் அதிகப்படியான மருத்துவ முகாம்கள் திட்டமிடப்பட்டிருந்தது. இதில் சென்னை மாவட்டத்தில் 679 இடங்களிலும், திருவள்ளுர் மாவட்டத்தில் 200 இடங்களிலும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 200 இடங்களிலும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் 100 இடங்களிலும், தமிழ்நாட்டில் உள்ள மற்ற மாவட்டங்களில் 2000 என்கின்ற வகையில் மொத்தம் 3000 மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.

 

 

-ht