சென்னையில் புயலால் பாதிக்கப்பட்ட இடங்களில் ஆய்வு

சென்னையில் தண்ணீர் தேங்காமல் இருக்க, ஐஐடி உள்ளிட்ட நிறுவனங்களுடன் ஆலோசித்து நிரந்தரத் தீர்வு காணப்படும் என்று வேளச்சேரி பகுதியில் மிக்ஜாம் வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்த தேசிய பேரிடர் மேலாண்மை ஆணைய ஆலோசகர் குணால் சத்யார்த்தி கூறியுள்ளார்.

மிக்ஜாம் புயல் பாதிப்பை மதிப்பிட்டு, மத்திய அரசு நிவாரணத்துக்கு பரிந்துரைக்க, தேசிய பேரிடர் மேலாண்மை ஆணைய ஆலோசகர் குணால் சத்யார்த்தி தலைமையில் வந்துள்ள மத்திய குழுவினர், சென்னை தலைமைச் செயலகத்தில், தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா மற்றும் துறை செயலாளர்கள் உடன் ஆலோசனையில் ஈடுபட்டனர். பின்னர் இரண்டு குழுக்களாக பிரிந்து மத்திய குழுவினர் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டனர். புயலால் பாதிக்கப்பட்ட பட்டாளம், வேளச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு நடத்தினா். இந்த ஆய்வின்போது, வடிநீர் கால்வாய்கள், துணை மின் நிலையங்கள் உள்ளிட்டப் பகுதிகளில் ஆய்வு நடத்தினர். இரண்டு குழுக்களும் இன்று ஒரே நாளில் மட்டும் 27 இடங்களில் ஆய்வு நடத்த திட்டமிட்டுள்ளனர்.

அரசுக்குப் பாராட்டு: பின்னர், வேளச்சேரி பகுதியில் ஆய்வு மேற்கொண்ட தேசிய பேரிடர் மேலாண்மை ஆணைய ஆலோசகர் குணால் சத்யார்த்தி கூறியது: “மத்திய அரசின் உள்துறை அமைச்சகத்தின் மூலம் வந்துள்ள எனது தலைமையிலான 6 பேர் கொண்ட குழு, சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள புயல் மற்றும் வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்து வருகிறோம். புயல் மற்றும் கனமழை பாதிப்புக்குள்ளான பகுதிகளில் பல இடங்களில் மழைநீர் தேங்கி நின்றதை அறிகிறோம்.

மாநில அரசின் வெள்ள மீட்பு பணிகள் பாராட்டத்தக்கது. தண்ணீர் தேங்கிய இடங்களில் இருந்து தண்ணீரை அகற்றியது, மின் விநியோகத்தை சீராக்கியது, தொலைத்தொடர்பு சேவை பாதிப்புகளை சரிசெய்தது என அரசு பல்வேறு நடவடிக்கைகளை துரிதமாக எடுத்துள்ளது. அதற்காக, மத்திய அரசின் சார்பாக எங்களது பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்” என்றார்.

அப்போது பெரும்பாலான மக்களின் கோரிக்கை என்னவாக இருந்தது என கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், “குடியிருப்பு பகுதிகளில் வசிக்கும் மக்கள் பலரும் தண்ணீர் தேங்கியதன் அளவு அதிகமானது குறித்து கவலை தெரிவித்தனர். நீர்நிலைகளின் அருகில் இருந்த குடியிருப்புகளில், ஏரிகளில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டதாலும், புயலின் காரணமாக பெய்த அதிகனமழையாலும் வெள்ளம் சூழந்துள்ளது.

இதனால் சென்னை முழுவதும் தண்ணீர் தேங்கியிருந்திருக்கிறது. வடிகால்கள் வழியே வெள்ள நீர் சென்று கடலில் கலப்பதும் கடினமாக இருந்துள்ளது. இது தொடர்பாக ஐஐடி உள்ளிட்ட நிறுவனங்களுடன் கலந்து ஆலோசித்துள்ளோம். ஏற்கெனவே நகர்ப்புற வெள்ளத் தணிப்பு திட்டத்துக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதுகுறித்து தொடர் ஆய்வுகள் மேற்கொண்டு விரைவில் நிரந்தர தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

மேலும், “இந்த ஆய்வு முடிந்த பிறகு, தமிழக அரசிடம் வெள்ளச் சேதங்கள் மற்றும் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் குறித்த அனைத்து ஆவணங்களையும் கேட்டுள்ளோம். அதன்பிறகு, எங்கள் குழுவில் மத்திய அரசின் 6 அமைச்சகங்களைச் சேர்ந்தவர்கள் இடம்பெற்றுள்ளனர். அவர்கள் உடன் கலந்து ஆலோசித்தப் பின்னர், எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு சீக்கிரம் மத்திய குழு அதன் அறிக்கையை சமர்ப்பிக்கும்.

 

-ht