இந்தியாவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களை கணக்கெடுப் பது சாத்தியமில்லை என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
குடியுரிமை சட்டத்தின் 6ஏபிரிவை எதிர்த்து அசாம் சன்மிலிட்டியா மகா சங்கம் (ஏஎஸ்எம்) உள்ளிட்ட அமைப்புகள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் 17 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
“கடந்த 1971-ம் ஆண்டுக்குப் பிறகு அசாமில் குடியேறியவர்கள் வெளிநாட்டினர் என்று குடியுரிமை சட்டத்தின் 6ஏ பிரிவில் கூறப்பட்டுள்ளது. இதை மாற்றி கடந்த 1951-ம்ஆண்டுக்குப் பிறகு அசாமில் குடியேறியவர்களை வெளிநாட்டினர் என அறிவிக்க வேண்டும்” என்று அந்தமனுக்களில் கோரப்பட்டுள்ளது.
இந்த வழக்கை தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு விசாரித்து வருகிறது.அண்மையில் வழக்கு விசாரணைக்கு வந்தபோது, கடந்த 1971-ம்ஆண்டுக்குப் பிறகு அசாம் மற்றும்வடகிழக்கு மாநிலங்களில் சட்டவிரோதமாக குடியேறியவர்களின் புள்ளிவிவரங்களை தாக்கல் செய்யதலைமை நீதிபதி உத்தரவிட்டார்.
இதுதொடர்பாக மத்திய அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பதில் மனுவில் கூறியிருப்பதாவது:
இந்தியாவில் சட்டவிரோதமாக குடியேறுபவர்கள் ரகசியமாக நாட்டுக்குள் நுழைகின்றனர். அவர்களை கண்டுபிடிப்பது, நாட்டை விட்டு வெளியேற்றுவது மிகவும் கடினம். நாட்டின் பல்வேறு பகுதிகளில் சட்டவிரோதமாக குடியேறியவர்களை கணக்கெடுப்பது, அவர்களின் புள்ளிவிவரங்களை சேகரிப்பது சாத்தியமில்லை.
குடியுரிமை சட்டத்தின் கீழ் இதுவரை 17,861 பேருக்கு இந்திய குடியுரிமை வழங்கப்பட்டு உள்ளது. தீர்ப்பாயங்களில் நடத்தப்பட்ட விசாரணைகளில் இதுவரை 32,381பேர் வெளிநாட்டினராக அறிவிக்கப்பட்டு உள்ளனர்.
நாடு முழுவதும் குடியுரிமை தொடர்பாக 100 தீர்ப்பாயங்கள் செயல்படுகின்றன. இவற்றில் 97,714 வழக்குகள் நிலுவையில் உள்ளன. தீர்ப்பாயத்தின் முடிவைஎதிர்த்து பலர் உயர் நீதிமன்றங்களில் மேல்முறையீடு செய்து வருகின்றனர். அந்த வகையில் அசாமின்குவாஹாட்டி உயர் நீதிமன்றத்தில் மட்டும் 8,461 வழக்குகள் நிலுவையில் உள்ளன.
கடந்த 2017 முதல் 2022-ம் ஆண்டு வரை 14,346 வெளிநாட்டினர் கண்டுபிடிக்கப்பட்டு நாட்டை விட்டு வெளியேற்றப்பட்டு உள்ளனர்.குடியுரிமை தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் தீர்ப்பாயங்களுக்காக கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் ரூ.122 கோடி செலவிடப்பட்டு உள்ளது.
இந்திய-வங்கதேச எல்லையில், சட்டவிரோத ஊடுருவலை தடுக்கும் பணியில் எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். மேலும் அசாம் போலீஸ் சார்பில் 23 மாவட்டங்களில் 159 சாவடிகள் அமைக்கப்பட்டு ஊடுருவலை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்தியா, வங்கதேச எல்லைப் பகுதி 4,097 கி.மீ. நீளம் கொண்டது. இதில் 3,922 கி.மீ. தொலைவுக்கு தடுப்பு வேலி அமைக்கப்பட்டு உள்ளது. 175 கி.மீ. தொலைவுக்கு தடுப்பு வேலி இல்லை.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
-ht