காசாவில் உடனடியாக போர் நிறுத்தம் செய்ய வலியுறுத்தி ஐநா பொதுச்சபையில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்துக்கு ஆதரவாக இந்தியா வாக்களித்துள்ளது.
கடந்த அக்டோபர் 7ஆம் தேதி இஸ்ரேல் மீது ஹமாஸ் குழுவினர் தாக்குதல் நடத்தியது. இதில் 1200-க்கும் மேற்பட்ட இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். 200க்கும் மேற்பட்டோர் பிணைக்கைதிகளாகப் பிடித்துச் செல்லப்பட்டனர். இதற்கு இஸ்ரேல் இன்றுவரை கடும் பதிலடி கொடுத்துள்ளது. இதில் 18 ஆயிரத்துக்கும் அதிகமான பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.காசாவில் 45 ஆயிரம் கட்டிடங்கள் தரைமட்டமாகியுள்ளன. 80 சதவீதத்துக்கும் அதிகமான மக்கள் தங்கள் வசிப்பிடங்களில் இருந்து வெளியேறியுள்ளனர். வடக்கு காசாவில் இருந்து மக்கள் வெளியேறிய நிலையில் தற்போது தெற்கு காசாவிலும் இஸ்ரேல் தாக்குதலைத் தொடங்கியுள்ளது. இதனால் அங்கு மிகப்பெரிய நெருக்கடி உருவாகியுள்ளது.
இந்நிலையில், இஸ்ரேல் – ஹமாஸ் போரால் ஏற்படுள்ள மனித உயிர் இழப்புகளைக் கருத்தில் கொண்டு உடனடியாக மனிதாபிமான அடிப்படையில் போர் நிறுத்தம் செய்யப்பட்ட வேண்டும், பிணைக் கைதிகள் எவ்வித நிபந்தனையும் இன்றி விடுவிக்கப்பட வேண்டும் போன்ற கோரிக்கைகளை முன்வைத்து ஐநா பொதுச் சபையில் வரைவுத் தீர்மானம் முன்மொழியப்பட்டது. இந்தத் தீர்மானத்துக்கு ஆதரவாக இந்தியா வாக்களித்துள்ளது,
இந்த தீர்மானத்துக்கு ஆதரவாக இந்தியா உள்ளிட்ட 153 நாடுகள் ஆதரவாக வாக்களித்தன. அமெரிக்கா, இஸ்ரேல், ஆஸ்திரியா உள்ளிட்ட 10 நாடுகள் எதிர்த்து வாக்களித்தன. வாக்களிப்பின்போது ஐநாவுக்கான இந்தியாவின் நிரந்தரப் பிரதிநிதி ருச்சிரா காம்போஜ் கூறுகையில், ”இஸ்ரேல் மீது கடந்த 7ஆம் தேதி பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்டது. பிணைக்கைதிகளாக சிலர் பிடித்துச் செல்லப்பட்டனர். பெருமளவில் மனிதாபிமான நெருக்கடி ஏற்பட்டுள்ளது, மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. பெண்கள், குழந்தைகள் பாதிப்பு எல்லை கடந்ததாக உள்ளது. இந்த வேளையில் மனிதாபிமான தலையீடு அவசியம். இரு நாட்டுத் தீர்வே இஸ்ரேல் – பாலஸ்தீன் சர்ச்சை நிரந்தரத் தீர்வாக இருக்க இயலும்” என்றார்.
காசா தாக்குதல் விவகாரத்தில் இஸ்ரேல் உலக நாடுகளின் ஆதரவை இழந்து வருவதாக அமெரிக்க அதிபர் பைடன் தெரிவித்த நிலையில் இந்த வாக்கெடுப்பும் அதற்கு இந்தியா உள்பட 153 நாடுகளின் ஆதரவும் கவனம் பெறுகிறது.