போலி ஆவணங்கள் மூலம் இலங்கை தமிழர்கள் 28 பேருக்கு பாஸ்போர்ட் – 6 பேர் கைது

தஞ்சாவூர் மாவட்டம் சேதுபாவாசத்திரம் பகுதியில் இருந்து, இலங்கை தமிழர்களுக்கு போலி ஆவணங்கள் மூலம் பாஸ்போர்ட் தயாரித்து விநியோகம் செய்யப்பட்டு வருவதாக க்யூ பிரிவு போலீஸுக்குத் தகவல் கிடைத்தது.

இதுகுறித்து டிஎஸ்பி சிவசங்கரன் தலைமையிலான போலீஸார் விசாரணை நடத்தியபோது, ஆண்டிக்காடு கிராம அஞ்சலகத்தில் அஞ்சலராகப் பணியாற்றும் கோவிந்தராஜ்(64) என்பவர், கும்பகோணம் வடிவேல்(52), ராஜமடம் சங்கர்(42) ஆகியோரிடம் போலி ஆவணங்கள் மூலம் பெறப்பட்ட பாஸ்போர்ட்களை விநியோகம் செய்வதாக தகவல் கிடைத்தது.

இதையடுத்து, கடந்த 12-ம்தேதி இரவு பட்டுக்கோட்டை ரயில்வே ஸ்டேஷன் பகுதியில், வடிவேல், சங்கர் ஆகியோரிடம் கோவிந்தராஜ் பாஸ்போர்ட்-ஐ ஒப்படைத்தபோது, மூவரையும் போலீஸார் கைது செய்தனர்.

விசாரணையில், தமிழகத்தில் வசிக்கும் இலங்கைத் தமிழர்களுக்கு போலி ஆவணங்கள் மூலம் பாஸ்போர்ட் பெற்று வழங்கியதும், சேதுபாவாசத்திரம் காவல் நிலைய தற்காலிக கணினி ஆபரேட்டர் பாலசிங்கம்(36), திருச்சி கல்கண்டார்கோட்டை வைத்தியநாதன்(52), கும்பகோணம் ராஜு (31) ஆகியோருக்கும் இதில் தொடர்பு உள்ளதும், இவர்கள் பணம் பெற்றுக்கொண்டு, போலி ஆவணங்கள் மூலம் 28 பாஸ்போர்ட்களை தயாரித்து விநியோகம் செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து, பாலசிங்கம், வைத்தியநாதன், ராஜு ஆகியோரையும் போலீஸார் கைது செய்தனர்.

 

 

-ht