தமிழகத்தில் கரோனா பரிசோதனைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
டெங்கு உள்ளிட்ட மழைக்கால நோய்களுக்காக தமிழகம் முழுவதும் வாரம்தோறும் சனிக்கிழமையில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மழைக்கால மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதுவரை 16,516 முகாம்களில் 7.83 லட்சம் பேர் பயன்பெற்றுள்ளனர். இந்நிலையில், 8-வது வாரமாக தமிழகம் முழுவதும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்களில் நேற்றும் முகாம்கள் நடைபெற்றன. சென்னை அடையாறு மண்டலம், வேளச்சேரி 100 அடிசாலை, சசி நகரில் நடைபெற்ற முகாமை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.
பின்னர் அமைச்சர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: மழைக்கால மருத்துவ முகாம்களில் 9 மாதம் தொடங்கி 15 வயது வரை உள்ளசிறார்களுக்கு தட்டம்மை ரூபெல்லா தடுப்பூசி போடும் பணியும் நடைபெறுகிறது. குறிப்பாக சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளுர், காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களில் வெள்ளப் பாதிப்பு உள்ளான பகுதிகளில் ரூபெல்லா தடுப்பூசி போடும் பணிகள் விரிவுபடுத்தப்பட்டு உள்ளன.
பிளீச்சிங் பவுடர்: வெள்ளம் பாதித்த பகுதிகளில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி, தரைத்தளத்தில் உள்ளகுடிநீர் தொட்டிகளை பிளிச்சிங்பவுடர் பயன்படுத்தி தூய்மைப்படுத்திக் கொள்ள வேண்டும். அதற்காக, சென்னை மாநகராட்சியின் சார்பில் மிக்ஜாம் புயல் பாதிப்புகளுக்குள்ளான 4 மாவட்டங்களில் நடைபெறும் மருத்துவ முகாம்களில் ஒவ்வொரு குடும்பத்துக்கும் அரை கிலோ பிளீச்சிங் பவுடர் கொடுக்கப்படுகிறது.
கேரளாவில் கரோனா தொற்றுபாதிப்பு அதிகரித்துள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் 4 நாட்களிலேயே சரியாகி விடுகின்றனர். தமிழகத்தில் கரோனா தொற்று பரவல் கண்காணிக்கப்பட்டு வருகிறது. காய்ச்சல் பாதிப்புகள் அதிகம் உள்ள பகுதிகளில் ஆர்டிபிசிஆர் கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. கடந்த 4 மாதங்களாக குறைந்த அளவில் மேற்கொள்ளப்பட்டு வந்த பரிசோதனைகள் தற்போது அதிகரிக்கப்பட்டுள்ளது. சபரிமலைக்கு செல்பவர்கள் அனைவரும் பரிசோதனை செய்யப்பட வேண்டிய அவசியம் இல்லை. அதுபோன்ற பதற்றமான சூழல் ஏற்படவில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
-ht